புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார் அனுமதிக்கு முதல்வர் ரங்கசாமி ரூ.20 லட்சம் லஞ்சம் பெறுகிரார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசு எதிர்கட்சிகளை பழிவாங்குகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் மாநில முதல்வர்கள் மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியின் போது அமலாக்கத்துறை, சிபிஐ மூலமாக 750 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டன. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் 5900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பாதி அரசியல் ரீதியாக போடப்பட்ட பொய் வழக்குகள்தான். 2024க்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மோடியின் ஊழல்கள் பட்டியலிடப்படும். அதானி முதல் புதுச்சேரி ஊழல் அமைச்சர்கள் வரை சிறைக்கு செல்வார்கள். தமிழகத்தில் ஆளுநர் ரவி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
தமிழக அரசின் 12 மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். ஆளுநர்களாக இருப்பவர்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது, அமைச்சரவை முடிவுகளை ஏற்கத்தான் வேண்டும். தமிழிசை ரங்கசாமிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து, அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார். முழுநேர அரசியல் செய்யும் தமிழிசை ஆளுநராக இருக்க தகுதியில்லாதவர். ஆளுநர் மாளிகை பிஜேபி அலுவலகமாக செயல்படுகிறது. முதல்வர் ரங்கசாமி பலவீனமாக இருப்பதால் இந்த ஆட்சியை தமிழிசை டம்மியாக்கி விட்டார்.
மற்றொரு சூப்பர் முதல்வரான சபாநாயகர் சட்டசபை பாதுகாப்பு கொடுப்பதுதான் அவரது வேலை. அவர் அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட அதிகாரமில்லை. சபாநாயகர் அதிகார வரம்பை மீறி தலைமை செயலரை அழைத்து விளக்கம் கேட்கிறார். பாஜக பொறுப்பாளரை போல் நடந்து கொள்கிறார். ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பதவியில் இருக்க தகுதியில்லாதவர். சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்று, சபாநாயகர் மீது வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம். அமைச்சர்களும் ஆர்எஸ்எஸ் உடைகளை அணிந்து கொண்டு ஊர்வலம் செல்கிறார்கள். ஆர்எஸ்எஸ் மூலம் திட்டமிட்டு கலவரம் செய்ய பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்
* ரெஸ்டோ பார் அனுமதிக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்குகிறார் முதல்வர் ரங்கசாமி
நாராயணசாமி கூறுகையில், ‘புதுச்சேரி பாஜ-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கஞ்சா, அபின், கள்ளச்சாராயம், போலிமது விற்கப்படுகிறது. அமைச்சர்கள், முதல்வர், கவர்னரிடையே ஒருங்கிணைப்பு இல்லை. ரெஸ்டோ பார் அமைப்பதற்கு முதல்வர் ரூ. 20 லட்சம் நேரடியாக லஞ்சம் பெறுகிறார். என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் லஞ்சம் கொடுப்பதற்காக முதல்வர், அமைச்சர்கள் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.
ஒரு அமைச்சர் நேரடியாக 13 சதவீதம் கமிஷன் பெறுகிறார். இந்த ஆட்சியில் ஊழலை தவிர வேறு எதுவும் இல்லை. நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்றால் என் மீது வழக்கு தொடரட்டும். புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் புதுவை அரசின் ஊழல், முறைகேடுகள் குறித்து குற்றப்பத்திரிகை தயார் செய்து வருகிறோம். இரண்டு மாதத்தில் ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்கப்படும்’ என்றார்.