புதுச்சேரி: தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் ஆளுநர்கள் விளையாடுவதாக என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 9 ஆண்டுகளில் தலைவர்களின் பெயர்களை மாற்றுவதும், கடந்த கால சரித்திரத்தை மறைப்பது போன்ற வேலையை பிரதமர் மோடி செய்து வருகிறார். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலனடைந்துள்ளனர் என்று அப்பட்டமான பொய்யை கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையில் தமிழக ஆளுநர் விளையாடி இருக்கிறார். புதுச்சேரி கவர்னர் தமிழிசையும், நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.
நீட் தேர்வால் மாணவர்கள் பலனடைந்துள்ளனர் என்று மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார். தமிழக மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் துரோகி என்றால், புதுச்சேரி கவர்னர் தமிழிசையும் மாணவர்களுக்கு எதிரியாக இருக்கிறார். கவர்னர் தமிழிசை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். புதுச்சேரி, தமிழக ஆளுநர்கள், தமிழ்நாட்டின் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர். பொறுப்பு கொடுத்த தெலங்கானாவுக்கு தமிழிசை செல்வதில்லை. புதுச்சேரியில் இருந்து தமிழகம் சென்று அரசியல் பேசுகிறார்.
இது ஒரு ஆளுநருக்கு அழகல்ல. தமிழக-புதுச்சேரி பிரச்னையில் பொது கருத்துகளை வெளியிட விரும்பினால் தமிழிசை பதவியை ராஜினாமா செய்துவிட்டு கருத்து தெரிவிக்கலாம். இவர்கள் அமித்ஷாவின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள். முதல்வர் ரங்கசாமி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாநில அந்தஸ்து பெறுவோம் என்று கூறுவார். அவருக்கு பிரச்னை வரும் போதெல்லாம் இதனை கையில் எடுத்துக்கொள்வார். ரங்கசாமி முதல்வராக இருக்கும் வரை, அவரால் மாநில அந்தஸ்து பெற முடியாது’ என்றார்.