சென்னை: தமிழக அரசு மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நவம்பர் 19 முதல் 22 வரை தணிக்கை வார விழா-23 கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தணிக்கை மற்றும் கணக்கு துறை பிரிவின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் 120 அலுவலர்களுக்கான 25 கிலோமீட்டர் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது.இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
1860ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை தினம் கொண்டாடப்படுகிறது. காலையில் மிதிவண்டி பயணம் செய்வது நல்லது தான். ஓர் ஆண்டில் உள்ள 8760 மணி நேரத்தில் 500 மணி நேரம் எனக்காக ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முடிவு எடுத்தேன். அதில் இந்த நவம்பரிலேயே 500 மணி நேரத்தை நிறைவு செய்ய போகிறேன். அடுத்த ஆண்டு 4000 கிலோ மீட்டர் ஓட வேண்டும் என்று குறிக்கோள் வைக்க உள்ளேன். இந்த காலக்கட்டத்தில் உலக அளவில் மாரடைப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசு இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள்.
தமிழக மாநில அரசு அந்த ஆராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக 100 கோடி ரூபாயில் புதிய ஆராய்ச்சி மையம் கட்ட திட்டமிட்டு உள்ளோம். அகில உலக மருத்துவ மாநாடு ஜனவரி 3ம் தேதி தமிழகத்தில் நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில், உலகில் உள்ள 100 மேற்பட்ட சிறந்த மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 3 நாட்கள் நடக்க உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்தியாவில் முதல் சர்வதேச மருத்துவ வல்லுனர்களுடனான மாநாடாக இது இருக்கும் என்றார்.