சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்தவுடன், மேட்டூர் அணையில் இருக்கக்கூடிய தண்ணீர் முழுவதையும் திறந்துவிடுவதை குறைத்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாய தீர்ப்பின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான பங்கு நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் பெற்றிருக்க வேண்டும். தற்போது, மேட்டூர் அணையில் இருந்து நீரையெல்லாம் காலி செய்தபின், ஒன்றிய அரசை காரணம் காட்டி காலதாமதம் செய்ததை தவிர காவிரி நீர் பிரச்னைக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரை திறந்து விட்டால் தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம். எனவே, காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டி தமிழக மக்களின் உரிமையை காத்திட காவிரி நீரை விரைந்து பெற்றிட ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.