புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் புதிய மூன்று நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை திறந்து விட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேப்போன்று வரும் செப்டம்பர் மாதம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வு நீதிபதிகளான பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. கர்நாடகா அரசு புதிய பிரமாணப் பத்திரம்: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு ஒரு புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில், ‘‘காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை அவசரமாக விசாரிக்க தேவையில்லை. குறிப்பாக காவிரியில் இருந்து திறந்து விடப்படும் நீரை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை. கர்நாடகா அரசை பொறுத்தவரையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கும் அனைத்து உத்தரவுகளையும் அமல்படுத்துகிறது. அதேப்போன்று மேகதாதுவில் அணை கட்டியிருந்தால் இதுபோன்ற நீர் தட்டுபாடு பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் கர்நாடகா அரசு ஆகிய இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கும் விசாரணையின் போது காரசார வாதங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.