சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பேசியதாவது: கடந்த 45 ஆண்டுகளில் 875 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதேபோன்று 2014ம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்த போட்டி நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு இந்திய மீனவர்களைப் பார்த்து, கிரிக்கெட்டில் இம்முறை நாங்கள் தோற்றால் உங்களை எல்லாம் கடலிலேயே வெட்டி தலை வேறு, முண்டம் வேறு என்று ஆக்கிவிடுவோம் என மிரட்டினர்.
அம்முறை இலங்கை தோற்று, இந்தியா வெற்றி பெற்றுவிட்டது. அன்றைய நாளிலேயே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை கொடூரமாக இலங்கை கடற்படை கொலை செய்தது. தலை வேறு, முண்டம் வேறாக நான்கு தமிழர்களின் உடல்களும் கடலில் மிதந்தன. இப்பொழுது, 10 நாட்களுக்கு முன்பே இலங்கை கடற்படையினர் நமது கடல் ஆதிக்கம் உள்ள இடத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நமது மீனவர்களைப் பார்த்து, படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தலையை தனியாக வெட்டியும் கோர கொலையைச் செய்துள்ளனர்.
இந்திய அரசு, தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இரண்டு முறை பிரதமரை சந்தித்தேன்.
வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து, தமிழக மீனவர்களின் துயர நிலையை எடுத்துக் கூறி, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே இருந்தால், தமிழக மீனவர்களின் இளம் தலைமுறையினரிடம் இந்தியா மீது வெறுப்புத்தான் உருவாகும்.