சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை மீனவர்களின் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. நேற்று முன்தினம் காலை நாகப்பட்டினம், செருதூர் மீனவர்கள் 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 3 படகுகளில் அப்பகுதிக்கு வந்த 10 இலங்கை மீனவர்கள் நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
படகில் இருந்த வலை, வாக்கி டாக்கி, இன்ஜின், ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். தாக்குதலான மீனவர்கள் உயிர்பிழைத்தால் போதும் என்ற ரீதியில் படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பித்து நேற்று காலை கரை வந்தனர். பிறகு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் நாகை மாவட்ட மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மீனவர்கள் தாக்கப்பட்டு, மீன்பிடிச்சாதனங்களை இழந்ததால் மிகப்பெரிய அளவில் பொருளாதார நஷ்டம் அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அவ்வப்போது நடைபெறுவது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. ஒன்றிய அரசு நாகை மீனவர்கள் மீதான இலங்கை மீனவர்களின் தாக்குதலுக்கு இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு இலங்கை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நஷ்ட ஈடும் பெற்றுத்தர வேண்டும். இது போன்ற ஒரு தாக்குதல் சம்பவம் இனி நடைபெறக்கூடாது என்பதை ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற தொடர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.