சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மீதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அத்துடன் 6, 7ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும் மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகத்தில் இன்று வீசும். 6ம் தேதி மத்திய வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும்.