Monday, September 9, 2024
Home » தமிழகம் அனைத்து துறைகளிலும் சமச்சீராக வளர்ந்து வருகிறது திட்டங்கள் உடனடியாக மக்களிடம் சேர திட்டமிடுங்கள்: திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகம் அனைத்து துறைகளிலும் சமச்சீராக வளர்ந்து வருகிறது திட்டங்கள் உடனடியாக மக்களிடம் சேர திட்டமிடுங்கள்: திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Ranjith

சென்னை: தமிழகம் அனைத்து துறைகளிலும் சமச்சீராக வளர்ந்து வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை உடனடியாக சென்று சேர திட்டமிடுங்கள் என்று திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழு தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநில திட்டக் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாநில திட்டக்குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

அதில் நான்காவது திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் அறிவுரைகளின்படியும், வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ளப்பட்ட பணிகளான, புதுமைப்பெண் திட்டத்தின் தாக்கம், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம், எண்ணும் எழுத்தும் திட்டச் செயலாக்கத்தின் மதிப்பீடு போன்ற ஆய்வு முடிவுகள் குறித்தும் விவரித்தார். மேலும் மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களான தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம், தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரிய பணிகள் பற்றியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் பற்றியும் விரிவாக விவரித்தார்.

இதைத்தொடர்ந்து திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கை மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த அறிக்கையைத்தான், எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்டாக நான் நினைக்கிறேன்.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலமாக மாணவர்கள் மட்டுமல்ல, கல்வி துறையில் அடைந்துள்ள வளர்ச்சி என்ன?

* மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக கிராமப்புற சுகாதாரம் எந்தளவுக்கு மேன்மை அடைந்துள்ளது?

* நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு கூடிவருவதால் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன? என்பது போன்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.

திமுக அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது என்பதை அறிந்தேன். இதனைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது. இந்த தகவல்களை எல்லாம் மக்களிடமிருந்து நேரடியாக நாங்கள் அறிந்தாலும், புள்ளிவிவரங்களாக நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இந்த திட்டக்குழு அமைக்கப்பட்டு முதல் முறையாக உங்களை சந்தித்தபோது நான் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம்தான் திமுக. நமது மாநிலத்தின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் எந்தளவுக்கு சிறப்பானவை என்பதை உங்கள் அறிக்கைகள் சொல்கிறது. அதனை இன்னும் சிறப்பானதாக நடத்துவதற்கு ஏதாவது ஆலோசனைகள் இருந்தாலும் சொல்லுங்கள். மேலும், ஆலோசனை சொல்வதோடு உங்கள் கடமை முடிந்துவிடவில்லை. நீங்கள் வழங்கிய ஆலோசனைகள் செயல்படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணியுங்கள். ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு ஏதாவது தடை, தடங்கல்கள் இருக்கிறதா? என்பதை பாருங்கள்.

கடந்த முறை என்னிடம் தரப்பட்ட அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி தேர்வு வினாத்தாள்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை சொல்லி இருந்தீர்கள். அது செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யுங்கள். வேளாண்மை, காடுகள், வெப்பம் அதிகரிப்பு ஆகியவை குறித்த உங்களது ஆலோசனைகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளாக எந்தளவு மாறி உள்ளது என்பதையும் ஆய்வு செய்யுங்கள்.

மாநில திட்டக்குழுவை இந்தியாவிலேயே முதன்முதலாக அமைத்தவர் தலைவர் கலைஞர். ஒன்றிய அரசில் இருப்பதை போல மாநிலத்திற்கு இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் இதனை அமைத்தார். பசி இல்லை, பஞ்சம் இல்லை, வறுமை இல்லை, கொடுமையான தொற்று நோய் இல்லை, சாலைகள் இல்லாத கிராமங்கள் இல்லை, மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை,

குடிதண்ணீர் இல்லாத கிராமம் இல்லை, பள்ளிகள் இல்லாத கிராமம் இல்லை – இப்படி தன்னிறைவு பெற்றவையாக அனைத்து மாவட்டங்களையும் உருவாக்கினோம். எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலைமையை உருவாக்கி வருகிறோம். கல்வித் துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்து துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது. அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியை தந்துள்ளது.

அந்த அறிக்கையை முன் மாதிரியாக கொண்டு உங்களது ஆய்வறிக்கை ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளை சொல்லுங்கள். அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்து மனிதர்களையும் உடனடியாக சென்று சேர திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்து பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்கான இலகுவான நிர்வாக சீர்திருத்தங்களை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கும் நான், இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பணியை, பொறுப்பை வழங்க விரும்புகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்களை, சாதனைகளை சொல்லும் வகையில் ஒரு மாபெரும் கருத்தரங்கை சென்னையில் நீங்கள் நடத்திட வேண்டும். அதில் பல்துறை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை பங்கேற்க வைத்து, அவர்களது ஆய்வு கட்டுரைகளை பெற்று, அதனை வெளியிடுமாறு துணைத்தலைவர் ஜெயரஞ்சனை கேட்டுக் கொள்கிறேன். இது நமது அரசு என்ற எண்ணத்தோடு செயல்படும் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், குழு உறுப்பினர்கள் இராம.சீனுவாசன், விஜயபாஸ்கர், தீனபந்து, எம்எல்ஏ நா.எழிலன், மஜோ.அமலோற்பவநாதன், சிவராமன், நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.சுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* கல்வித்துறையில், வேளாண்மையில், உள்கட்டமைப்பு வசதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துவிட்டது. அனைத்து துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது.

* இன்னும் புதிய புதிய திட்டங்கள் வர இருக்கிறது
பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும் என்று நான் அப்போது குறிப்பிட்டேன்.

இதே அடிப்படையில்தான், கடந்த மூன்றாண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன. மாநில திட்டக்குழுவின் மூலமாக நான் எதிர்பார்ப்பது, புதிய, புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை நான் எதிர்ப்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கித் தாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

5 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi