சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரியை மாற்ற மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய தலைவர் பதவியைப் பிடிக்க தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது. எனினும் கட்சி தலைமை என்ன முடிவை அறிவிக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகாததால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுயுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேநேரம் பாஜ ஆட்சியை வீழ்த்தியாக வேண்டும் என்ற ஒற்றுமையுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன.
இந்த கூட்டணி ஒருங்கிணைப்புடன் தேர்தலை எதிர்கொள்ளும்பட்சத்தில் பாஜவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும். எனவே, எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. பாஜவுக்கு ‘டப்’ கொடுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில தலைவர்களை களப்பணியில் தீவிரம் காட்ட காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தீவிரமாக செயல்படும் வகையில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை மாற்றம் செய்தும், காலியாக உள்ள பதவிகளுக்கு ஆட்களை நியமித்தும் கிராமம் வாரியாக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை கட்சி மேலிடம் எடுத்து வருகிறது.
அதன்படி, தமிழ்நாட்டிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக காங்கிரசை பொறுத்தவரை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிறது. வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படுவார். கே.எஸ்.அழகிரி தலைமையில் ஒரு சட்டமன்ற தேர்தல், ஒரு நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களை காங்கிரஸ் சந்தித்தது. இந்த தேர்தல்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனால் தலைவர் மாற்றம் பற்றி டெல்லி மேலிடம் பரிசீலிக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகள் ஆவதால் புதிய தலைவர் நியமிக்கலாம் என்று கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் டெல்லியில் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் நியமனத்தை முடித்த பின்னர் இதுபற்றி முடிவெடுக்கலாம் என்றும் கட்சி தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால் இப்போது மாநில தலைவரை மாற்றினால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்படலாம் அல்லது அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்ற பரபரப்பு காங்கிரசார் மத்தியில் தொடர்ந்து எழுந்து வந்தது.
அதேநேரம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மற்ற மூத்த தலைவர்கள் பலர் கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மிசோராம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர், ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். இந்த மாநில சட்டமன்ற தேர்தலில் பெறும் வெற்றியானது அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பட்டியலில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள டாக்டர் செல்லக்குமார் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்பி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன், மாணிக்கம் தாகூர் எம்பி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரை நியமிக்கலாம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்று மாலை அல்லது இரவுக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மாநில தலைவர் மாற்றம் இல்லாவிட்டால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே நீடிப்பார் என்பது குறித்தும் கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கட்சி மேலிடத்தின் எந்த முடிவாக இருந்தாலும் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழ்நாடு காங்கிரசார் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது.