ஈரோடு: ‘தமிழகத்தில் 233 புதிய சிவில் நீதிபதிகளுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்’ என்று ஐகோர்ட் (பொ) தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் கூறினார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கொடுமுடி, எழுமாத்தூர் மற்றும் பெருந்துறை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கோர்ட் கட்டிடங்களை திறந்து வைத்த சென்னை ஐகோர்ட் (பொ) தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பேசியதாவது: நாணயத்தின் இருபக்கம் போல நீதிபதிகளும், வழக்கறிஞர்களும்.
வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க முடியும். சில வழக்குகள் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து விரைவாக முடிக்க வேண்டும். நீண்டகாலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதிமன்ற செயல்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கோர்ட் இருக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றமும், அரசும் எடுத்து வருகின்றது. வீடியோ கான்பரன்ஸ், இ பைலிங் தொழில்நுட்பங்களால் கோர்ட் நேரம் மிச்சமாவதோடு, வழக்காடிகளுக்கு உரிய காலத்தில் தீர்ப்பு பெற்றுத்தர முடியும். தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் 300 புதிய சிவில் நீதிபதிகளுக்கு பரிந்துரை செய்தது. இதில், 233 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதனால், சீனியாரிட்டி அடிப்படையில் பல நீதிபதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
* பாகுபாடின்றி நீதி வழங்கினால்தான் அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்எம் சுந்தரேஷ் பேச்சு விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், ‘நாம் சட்டத்தை ஒரு ஆயுதமாக எடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் நீதி வழங்க வேண்டும். அப்போது தான், நீதிமன்றத்திற்கு அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும்.
புதிதாக நீதிமன்றங்கள் வருவது மட்டும் நமக்கு பெருமை கிடையாது. நீதிமன்றங்கள் மக்களை நோக்கி செல்ல வேண்டும். மக்களுக்காக பணியாற்றும் ஒரு அரங்கம் தான் நீதிமன்றங்கள். எனவே, அதில் பணியாற்றும் நீதிமன்ற பணியாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவரும் தங்களது தொழில் தர்மத்தை மறக்கக்கூடாது’ என்றார்.