சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நாவலர் நெடுஞ்செழியன் நகர் (ம) சிந்தாதிரிப்பேட்டை, கொய்யாத்தோப்பு ஆகிய திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் சாலை திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் இடத்தையும் நேற்று ஆய்வு செய்தார்.
அதாவது, நாவலர் நெடுஞ்செழியன் நகர் (ம) சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ.76.87 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 5 தளங்களுடன் 450 அடுக்குமாடி குடியிருப்புகளும் மற்றும் கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் ரூ.61.20 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 5 தளங்களுடன் 324 அடுக்குமாடி குடியிருப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதை தொடர்ந்து, பம்பிங் ஸ்டேஷன் சாலை திட்டப்பகுதியில் அப்பகுதியில் வாழும் மக்களுக்காக ரூ.75 கோடி மதிப்பீட்டில் சுமார் 400 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.
முன்னதாக சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினார். ஆய்வு நிகழ்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் மதன்மோகன், தலைமை பொறியாளர் சு.லால் பகதூர், மேற்பார்வை பொறியாளர் (பொ) இளம்பரிதி, நிர்வாகப் பொறியாளர் வாஞ்சிநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.