சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரின் 102வது பிறந்தநாளை செம்மொழி நாளாக சாதனைகளை விளக்கும் வகையில் திமுக கொண்டாடுகிறது. கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்திய பல முக்கிய திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. 102 இடங்களில் அந்தந்த கழக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தலைவர் கலைஞர் சாதனைத் திட்டங்களால் பயனபெற்று வரும் மக்களோடு சேர்ந்து பிறந்த நாள் விழா கொண்டாடப்படும்.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மெட்ராஸ் – சென்னை என பெயர் மாற்றம் செய்தது, அண்ணா நூற்றாண்டு நூலகம், வள்ளுவர் சிலை, தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் இப்படி 102 வகையான கலைஞரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும் தமிழ்நாடு முழுவதும் 102 பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, தலைவர் கலைஞர் பிறந்த நாள் இனி ‘செம்மாழி நாள்’ எனும் பெயரில், தமிழர் பெருமையின் நாளாக, உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.
அனைத்து திமுக தொண்டர்களும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி, இந்நிகழ்வுகளை மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில், எழுச்சிமிக்க உற்சாகத்துடன் நடத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.