Sunday, March 16, 2025
Home » உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

by Neethimaan


சென்னை: தமிழ் மீது இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம்” என கழக உடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்காவது மடல் எழுதியுள்ளார். அதில்; இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் முதன்மையாக நிற்கும். 1949 செப்டம்பர் 17 அன்று தி.மு.க. தொடங்கப்பட்டு, மறுநாள் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் கூடி நின்ற தமிழ் மக்களிடம் உரையாற்றிய அண்ணா, “பெரியாரே..

நீங்கள் அளித்த பயிற்சிப் பக்குவம் பெற்ற நாங்கள், உங்கள் வழியிலேயே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம். தொடக்க நாளாகிய இன்றே!” என்று அறிவித்தார். தி.மு.கழகம் பிறந்தது முதல் இந்த 75 ஆண்டுகளாக சந்திக்காத களம் இல்லை. எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது. வழக்குகள், சிறைவாசம், உயிர்த்தியாகம் எல்லாவற்றையும் தாங்கித்தான் தாய்மொழியாம் தமிழையும் தமிழர்களின் உரிமையையும் காக்கின்ற மகத்தான இயக்கமாகத் திகழ்கிறது. அதனால்தான், தி.மு.க ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள்–அலறுகிறார்கள்.

நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழி வழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள். ராஜாஜி 1937 இல் இந்தியைத் திணித்தபோது திராவிட இயக்கம் முன்னெடுத்த போராட்டம் தமிழர்களை இன உணர்வு கொள்ளச் செய்தது. பெல்லாரி சிறையில் பெரியார் வாடினார். சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அண்ணா அடைக்கப்பட்டார். 73 பெண்கள், அவர்களின் கைக்குழந்தைகள் உள்பட தமிழர்கள் பலர் சிறை சென்றனர். தமிழர்கள் எழுச்சிமிக்க போராட்டத்தினால், 1939ல் இந்தித் திணிப்பைத் திரும்பப் பெற்றார் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாண ஆளுநர்.

முதல் மொழிப் போர்க்களத்தில் நாம் வெற்றி பெற்றாலும், போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில், இது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல. இந்தித் திணிப்பை முன்னே விட்டு, அதன் தொடர்ச்சியாக இந்த மண்ணை சமஸ்கிருதமயமாக்கும் சதித்திட்டத்துடன், தமிழ்ப் பண்பாட்டின் மீது நடத்த நினைக்கும் படையெடுப்பு இது. அதைத் தான் தொடக்க காலத்திலிருந்தே தெளிவாக உணர்ந்து போராடி, முறியடித்து வருகிறது திராவிட இயக்கம். இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே, கற்றுக்கொள்ளக்கூடாதா என்று கரிசனத்துடன் பேசுகிறவர்களிடம், “சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழிலேயே கோவில்களில் அர்ச்சனை செய்யலாமா? தமிழும் செம்மையான மொழிதானே?” என்று கேட்டுப் பாருங்கள்.

அவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் அடையாளமும் அம்பலமாகிவிடும். அதனால்தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ராஜாஜிக்குப் பிறகு, 1948ஆம் ஆண்டு பள்ளிகளில் மீண்டும் இந்தி கட்டாயப் பாடம் என அறிவிக்கப்பட்டபோது, பெரியார் தனது தளபதியான அண்ணாவை போராட்டக் களத்தில் சர்வாதிகாரியாக அறிவித்து, மொழிப்போருக்கானத் திராவிடப் படையைக் களம் காணச் செய்தார். அப்போது முதலமைச்சராக இருந்த பண்பாளர் ஓமந்தூர் ராமசாமியார் தந்தை பெரியாருடன் கலந்துரையாடி, தமிழுணர்வுக்கு மதிப்பளித்ததன் விளைவாக இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது. எனினும், இந்தியா விடுதலை அடைந்தபிறகும், குடியரசு நாடாக ஆன பிறகும் ஒன்றிய அரசின் மூலமாக இந்தித் திணிப்பு முயற்சிகள் ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று அதில் இடம்பெற்றிருந்த வடஇந்தியத் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியபோது, சென்னை மாகாணத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினரான டி.டி.கே.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்கள் அதனை எதிர்த்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். அரசியல் சட்டத்தையே இந்தி மொழியில்தான் நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் பிடிவாதம் பிடித்த போது, பண்டித ஜவகர்லால் நேரு போன்றவர்கள் அதனை ஏற்காமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் அதனை நிலைநிறுத்தினர்.

ஆட்சி மொழியாக இந்தியும், இணை ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என அறிவித்தனர். நேரு போன்ற தலைவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை உருவாக்கினார்கள். அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதற்கு எதிராக டெல்லியில் குரல் எழுப்பினர்.இன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்கின்ற கட்சியின் தலைவர்கள் இந்தியைத் திணிப்பதும், அதை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதுமாக இருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்களோ, இந்தி தெரியாத தமிழர்களை நோக்கிவடமாநிலத்தவர்கள் திட்டினால் புரிந்து கொள்ள முடியாது என்றும், வடமாநிலங்களுக்கு சென்றால் உணவகங்களில் ஆர்டர் பண்ண முடியாது என்றும், கழிவறை செல்வதற்குக்கூட இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் எல்லோரும் எள்ளி நகையாடும் வகையிலான அற்பக் காரணங்களைச் சொல்கிறார்கள்.

ரயில் பயணத்தில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியில் திட்டினால், பதிலுக்கு நம்மவர்கள் அவர்களைத் தமிழில் திட்ட முடியாதா? சுயமரியாதை உணர்வும் சூடும் சுரணையும் உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள். இங்குள்ள பா.ஜ.க.வினர் எப்படிப்பட்டவர்களோ. ஆதிக்க உணர்வுடன் திணிக்கப்படும் மொழிகளை சுயமரியாதை உணர்வுடன் எதிர்த்து நிற்கும் வலிமை தமிழுக்கும் தமிழர்களுக்கும் உண்டு. ரயில் நிலையங்களில், அஞ்சலகங்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தொடங்கி, ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியே முதன்மையாக இருப்பதை எதிர்த்து, அந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிட இயக்கங்கள் தொடங்கின.

திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் இயக்கம் உருவாகிவிட்டாலும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தமிழைக் காப்பதில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இரண்டு இயக்கங்களும் செயல்பட்டன. 1952 ஆகஸ்ட் முதல் தேதி அன்று திருச்சி ரயில்வே சந்திப்பின் ஒரு பகுதியில் இருந்த பெயர்ப்பலகையில் இந்தி எழுத்துகளைத் தந்தை பெரியார் அழிக்க, மற்றொரு பகுதியில் இருந்த பெயர்ப் பலகையில் முத்தமிழறிஞர் கலைஞரும் அவருடன் ஊர்வலமாக வந்த தி.மு.கழகத்தினரும் இந்தி எழுத்துகளை அழித்தனர். இத்தகையத் தொடர் போராட்டங்களுக்குப் பிறகே, ரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் முதலிடத்தில் இருந்த இந்தி எழுத்துகளுக்குப் பதிலாக, தமிழ் முதலிடம் பிடித்தது.

அந்தந்த மாநில ரயில் நிலையங்களிலும் அவரவர் தாய்மொழி முதன்மையாகவும், இந்தி எழுத்துகள் அடுத்ததாகவும், ஆங்கிலம் மூன்றாவதாகவும் இருக்கிறதென்றால் அதற்கு திராவிட இயக்கம் முன்னெடுத்த மொழிப் போராட்டமே காரணமாகும். தமிழை மட்டுமல்ல, இந்தி ஆதிக்கத்திடமிருந்து மற்ற மாநிலத்தவர்களின் தாய்மொழியையும் காப்பதற்கு திராவிட இயக்கத்தின் உறுதியான இந்தி ஆதிக்க எதிர்ப்புணர்வே முதன்மையாக உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின், 15 ஆண்டுகளில் இந்தியை மட்டுமே ஆட்சிமொழியாக நிறுவவதற்கான சட்டப்பிரிவுகளை முன்வைத்து, அதற்கான நடவடிக்கைகளை அன்றைய ஒன்றிய அரசு முயன்றபோது, 1957ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தேர்தல் களம் கண்டு, இரண்டு உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் நுழைந்தது திராவிட முன்னேற்றக் கழகம். நம் இயக்கத்தின் மக்களவை உறுப்பினர்களான திருவண்ணாமலை தருமலிங்கமும், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்தும், பிரதமர் நேரு இருந்த அவையில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து முழங்கினர்.

இந்தியா என்பது ஒற்றை நாடல்ல, இது ஒரு துணைக் கண்டம். பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்ட நிலப்பரப்பு என்பதை ஒட்டுமொத்த மக்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் முதன்முதலில் உரக்க முழங்கிய இயக்கம் நம் தி.மு.கழகம். அதன் விளைவாகத்தான், “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கும்” என்ற உறுதிமொழியை பிரதமர் நேரு வழங்கினார். தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆட்சிமொழி என்ற பெயரில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல் எழுப்பினர். பிரதமர் நேரு தனது உறுதிமொழி மீறப்படாது எனக் கடிதம் வாயிலாக உறுதி செய்தார்.

தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.வெ.கி.சம்பத் அவர்களுக்கு 1960ஆம் ஆண்டு பிரதமர் நேரு உத்தரவாதம் அளித்து எழுதிய கடிதத்தை, சென்னை கடற்கரையில் நடந்த கழகப் பொதுக்கூட்டத்தில் இலட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்களின் முன் வெளியிட்ட பேரறிஞர் அண்ணா, “என் தம்பிக்கு வாக்குறுதியை வரைந்துள்ள இந்தக் கரம், (அமெரிக்க ஜனாதிபதி) ஐசனோவரோடு கைக்குலுக்கிய கரம், ட்ரூமனோடு கைக்குலுக்கிற கரம், (எகிப்து) நாசரோடு கைக்குலுக்கிய கரம். இந்தக் கரம்தான் என் தம்பிக்கு கையெழுத்திட்டு வாக்குறுதியை வழங்கியுள்ளது” என நேருவின் வாக்குறுதியைக் குறிப்பிட்டார்.

கடற்கரையில் முழங்கிய அண்ணா 1962ஆம் ஆண்டு இந்தியநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகி ஆற்றிய முதல் உரையே ஒட்டுமொத்த அவையையும் கட்டிப்போட்டது. ‘மி தீமீறீஷீஸீரீ tஷீ tலீமீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ ஷிtஷீநீளீ’ என்ற அவரது புகழ்பெற்ற உரை, மாநில மொழிகள் மீதான பிரதமர் நேரு உள்ளிட்ட ஆட்சியாளர்களின் பார்வையில் புதிய திருப்பத்தை உருவாக்கியது. 1963ஆம் ஆண்டு மே மாதம், ‘இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்’ என்று மாநிலங்களவையில் அண்ணா ஆற்றிய உரை இந்தியை ஆட்சிமொழியாக்குவதால் இந்தியாவின் பிற மொழிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதை தன் அழுத்தமான வாதங்களால் முன்வைத்தார்.

அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளும்போது, இந்திய மொழியான இந்தியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ‘அறிவுத் ததும்பி வழியும்‘ இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களும் அவர்களின் கட்சியினரும் கேட்கிறார்கள். ஆங்கிலம் எல்லா மாநிலங்களுக்கும் அந்நிய மொழி. ஆனால், இந்தி சில மாநிலங்களுக்கு மட்டும் தாய்மொழி. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அனைத்திற்குமே அது அந்நிய மொழி.

இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மிகத் தெளிவாக விளக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், “இந்தி பேசும் மாநிலங்களின் மக்களுக்கு அதுவே தாய்மொழியாக இருக்கும். அதுவே அரசு மொழியாகவும் இருக்கும். அதுவே பயிற்று மொழியாகவும் இருக்கும். அதுவே மத்திய அரசின் மொழியாகவும் இருக்கும் இந்தி பேசும் மக்களுக்கு இவ்வளவு வாய்ப்புகள், உரிமைகளை வழங்கிவிட்டு, இந்தி பேசாத (மற்றமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட) எம் போன்ற மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார்.

அன்று அண்ணா கேட்டதைத்தான் நாமும் கேட்கிறோம். அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். காலம் மாறிவிட்டது அதனால் இந்தியைத் திணிப்போம் என்கிறார்கள் இன எதிரிகள். எத்தனை காலங்கள் மாறினாலும் அதற்கு ஈடுகொடுத்து நிற்கும் செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம் என்று கூறினார்.

You may also like

Leave a Comment

11 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi