திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாபெரும் தமிழ் கனவு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஊடகவியலாளர் கார்த்திகை செல்வன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ் இணைய கல்விக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கடந்த ஆண்டு மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியை நான்கு இடங்களில் நடத்தியது.
தமிழகம் முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகளில் 200 சொற்பொழிவாளர்கள் 1000 கல்லூரிகளைச் சார்ந்த ஒரு லட்சம் மாணவ, மாணவியர்களை சென்றடையும் வண்ணம் இந்த மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் 100வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு இந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியாக 2023 ஜூலை மாதம் மீண்டும் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையானதாக விளங்கும் தமிழ் பண்பாட்டின் பெருமையையும், வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு செல்வதற்குத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான ஒரு எதிர்கால சமுதாய கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரீகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் கார்த்திகை செல்வம் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நூல்களும் தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட உள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றி படித்து பயன்பெறுமாற வேண்டும். மேலும், இங்கு பகிரப்படும் கருத்துக்களை கேட்டு நீங்கள் பயனடைவதுடன் உங்கள் கல்லூரியில் உள்ள சக மாணவர்களிடம் இக்கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் உயர்கல்வி வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புத்தகக் கண்காட்சி அரங்கும் உள்ளது.
மாணவர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு காணொளியை கலெக்டர் பார்வையிட்டார். ‘சமூகப் பிணியும் நீதியின் பாதையும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கார்த்திகைசெல்வன் கருத்துரை வழங்கினார். அப்போது கேள்வி, பதில் பகுதியில் சிறந்த கேள்விகளை கேட்ட மாணவ, மாணவியர்களுக்கு கேள்வியின் நாயகி மற்றும் கேள்வியின் நாயகன் என்ற பட்டம் சூட்டிப் பாராட்டுச் சான்றிதழையும் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) சுபலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.