சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்புள்ள பெரியார் சிலையை அகற்றுவது தான் நோக்கம் என்று கூறுகிறார். சமூகநீதியை பாதுகாத்த பெரியாரையும், காமராஜரையும் இழிவுபடுத்துகிற அண்ணாமலையை தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது.
இத்தகைய அருவருக்கத்தக்க அநாகரிக பேச்சுகளினால் பாஜ குழிதோண்டி புதைக்கப்படுவது உறுதி. தமிழக அரசியல் வரலாற்றில் இவர்களது பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுகளினால் கடுமையாக பாதிக்கப்படப் போவது அண்ணாமலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகிறது. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.