சென்னை: கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் செம்மொழி’ குறித்த கண்கவர் கண்காட்சியை பொதுமக்கள் 9ம் தேதி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் 102ம் பிறந்த நாளான செம்மொழி நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு, கலைஞரின் அரிய ஒளிப்படங்களின் தொகுப்பு, தமிழ்ச் செவ்வியல் முதல் பதிப்பு நூல்கள், காலந்தோறும் தமிழ் மற்றும் தமிழ் மொழியின் வரலாறு, தமிழர் தொன்மை குறித்த ஓலைச்சுவடிகள் அடங்கிய ‘தமிழ்ச் செம்மொழி’ கண்காட்சியின் சிறப்புகளை பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கம் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ச் செம்மொழி குறித்த கண்கவர் கண்காட்சி வருகிற 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதனை, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் எவ்வித கட்டணமுமின்றி நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிட்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.