Thursday, June 19, 2025
Home மகளிர்நேர்காணல் ஆஸ்திரேலியா வானொலியில் தமிழ் குரல்கள்!

ஆஸ்திரேலியா வானொலியில் தமிழ் குரல்கள்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

‘‘ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் இயக்கப்படும் SBS வானொலி, பன்முக கலாச்சாரம் கொண்ட மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில், 60க்கும் மேற்பட்ட மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அதில் தமிழ் மொழியும் ஒன்று என்றால், தமிழர்களாகிய நமக்கெல்லாம் மகிழ்ச்சிதானே’’ எனப் புன்னகை தவழ பேச ஆரம்பித்தவர், SBS வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான ரேணுகா துரைசிங்கம்.‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இலங்கை யாழ்ப்பாணம்.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஊடகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற நிலையில், 2009ல் ஆஸ்திரேலியா வந்தேன். புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட தொலைக்காட்சி ஒன்றில் அறிவிப்பாளர் பணி எனக்குக் கிடைத்தது. இந்த நிலையில், SBS வானொலி தமிழ் ஒலிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டு புதிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நானும் விண்ணப்பிக்க, இதோ வானொலி பணி வாய்ப்பு பெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் என்னையும் சேர்த்து 5 பேர் செயல்படுகிறோம். நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்தை ரேமண்ட் செல்வராஜ் என்கிற தமிழர் கவனித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடன் இணைந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக நான், செல்வி ரஞ்சன், குலசேகரம் சஞ்சயன் மற்றும் மகேஸ்வரன் பிரபாகரன் ஆகியோர் பணியாற்றுகிறோம். இதில் செல்வி ரஞ்சன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மீதியிருக்கும் நாங்கள் மூவரும் இலங்கை தமிழர்கள்’’ என அறிமுகப்படுத்திக் கொண்ட ரேணுகா, SBS வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பு, அதன் செயல்பாடுகள் குறித்து பேச ஆரம்பித்தார்.

‘‘SBS வானொலியின் முக்கிய நோக்கமே ஆஸ்திரேலிய நாட்டில் நிகழும் செய்திகளை இந்த நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறுகிறவர்களின் மொழிகளில் எடுத்துச் சொல்வதுதான். எங்களுடைய தமிழ் நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவும் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்து குடியேறியுள்ள தமிழர்களுக்கான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை தமிழில் ஒலிபரப்பி வருகிறது.

முற்றிலும் புதிய ஒரு சூழலுக்குள், தங்களின் எதிர்கால வாழ்வை அமைத்துக் கொள்ள, இங்கு வருகின்ற தமிழர்களுக்கு நாங்கள் தயாரித்து வழங்கும் தமிழ் நிகழ்ச்சிகள் ஆறுதலாகவும், வழிகாட்டியாகவும் இருக்கின்றது’’ என்கிற ரேணுகா துரைசிங்கம், ‘‘SBS வானொலி வெறும் ஊடக நிறுவனமாக மட்டும் செயல்படாமல், இங்குள்ள தமிழ் சமூக குழுக்களுடன் இணைந்து, அவர்களின் பண்பாட்டு வேர்களை இணைக்கும் பாலமாகவும், தமிழ் மொழியை உயிர்ப்புடன் பாதுகாக்கும் கருவியாகவும் செயல்பட்டு வருகிறது’’ என்கிறார் தனது இலங்கை தமிழ் கலந்த மென்மையான ஆர்.ஜே. குரலில்.

‘‘அரசு கொள்கைகள், உள்நாட்டுச் செய்திகள், சர்வதேச செய்திகள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள், தமிழ் இசை, இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டை அடையாளமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் இவற்றுடன், மன ஆரோக்கியம், சமூகப் பிரச்னைகள், தலைமுறை முரண்பாடுகள் போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்குகிறோம். மேலும், அறுபதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வீகக் குடி மக்களோடு இருக்கின்ற தொடர்புகள், அவர்களின் கதைகள், வரலாற்றுப் பாடங்களையும், புலம்பெயர்ந்து இங்கு வந்து வாழுகிற தமிழர்களை மனதில் வைத்து தயாரித்து வழங்குகிறோம்’’ என்கிறார் ரேணுகா.

‘‘தற்போதைய டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சியில், இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக, இணைய வழி பகிர்தலையும் SBS வானொலி விரிவுபடுத்தி, இணையம், சமூக ஊடகங்கள், மொபைல் செயலி என பல்வேறு வழிகளில் தனது சேவையை தொடர்கிறது. இதனால் SBS வானொலி ஒலிபரப்பை விரும்பும் நேரத்திலும், தங்களுக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து கேட்கவும் முடிகிறது’’ என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த செல்வி ரஞ்சன்.

‘‘எனது இளமைப் பருவம் முழுவதும் திருச்சியில்தான். என்னுடைய இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளும் அங்குதான் இருந்தது. முதுகலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக நான் தேர்ச்சிப் பெற்றேன். திருமணத்திற்குப் பிறகு, கணவரின் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய சூழல். இங்கு வந்ததுமே கணினி துறையில்தான் எனக்கு வேலை வாய்ப்பு முதலில் அமைந்தது. கிட்டதட்ட 15 ஆண்டுகள் அதில் பணியாற்றிய நிலையில், தமிழ் மொழி மீதிருந்த பற்று காரணமாக ‘இன்பத் தமிழ் ஒலி’ என்கிற சமூக வானொலியிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய நாட்டு அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வந்த SBS வானொலி விரிவாக்கம் செய்யப்பட, தமிழ் ஒலிபரப்பில் நானும் இணைந்து கொண்டேன்’’ என, ஆஸ்திரேலிய வானொலியில் வேலை வாய்ப்பு கிடைத்த தனது முன்கதை சுருக்கத்தை விவரித்தபடி மேலே தொடர்ந்தார்.

‘‘1978ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2EA வானொலி தனது தமிழ் ஒலிபரப்பை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்கிற அடிப்படையில் அரை மணி நேரத்திற்கு ஒலிக்க ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து 1979 ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் 3EA வானொலியிலும் தமிழ் மொழி ஒலிக்கத் தொடங்கியது.

SBS தொலைக்காட்சி சேவைகள் 1980ல் தொடங்கிய நிலையில், 2EA, 3EA வானொலிகள் SBSன் கீழ் கொண்டுவரப்பட்டு, SBS தமிழ் என்கிற புதிய நாமத்துடன் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் தனது தமிழ் ஒலிபரப்பைத் தொடர்ந்தன. ஆரம்பத்தில் ஆறு மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பு இருந்தது. தற்போது தேசிய ஒலிபரப்பாக, பல்வேறு காலாச்சாரத் தன்மையின் முக்கிய அடையாளமாக, 60க்கும் மேற்பட்ட மொழிகளில் தனது ஒலிபரப்பை மேற்கொண்டு, தனது 50வது ஆண்டில் SBS தலைநிமிர்ந்து நிற்கிறது.

1992ல் SBS சேவைகள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட போது வாரத்திற்கு 45 நிமிடங்கள் என்றிருந்த தமிழ் ஒலிபரப்பின் நேரம் அதிகரிக்கப்பட்டு, 1994ல் வாரத்திற்கு ஒரு மணி நேரம் எனவும், 2013ல் வாரம் நான்கு மணி நேரம் எனவும், ஒலிபரப்பு நேரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மூன்றே வருடத்தில் SBS வானொலி, தமிழ் ஒலிபரப்பில் 50வது ஆண்டையும் தொட இருக்கிறது’’ எனக் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டியவாறு புன்னகைக்கிறார் செல்வி ரஞ்சன்.

‘‘SBS வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் எனக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷமாகவே நினைக்கிறேன்’’ என்றவர், ‘‘இங்கு பெண்களுக்கு சுதந்திரம் அதிகமாகவே இருக்கிறது. தங்களை என்னவாக நிலைநிறுத்திக்கொள்ள பெண்கள் விரும்புகிறார்களோ, அதற்கான சூழலும், வாய்ப்பும் ஏராளமாய் கொட்டிக் கிடக்கிறது. இதனை பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கை ரொம்பவே பிரகாசிக்கும்’’ என்கிறார் செல்வி.

மேலும் அவர் பேசும்போது, ‘‘பெண்களுக்கு கல்வி மிகமிக முக்கியம். தங்களுக்குப் பிடித்த துறையில் பெண்கள் அறிவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் பொருளாதாரத்திலும் யாரையும் சார்ந்து வாழாமல், தன்னிறைவோடு தனித்துவமாக செயல்பட வேண்டும்’’ என்கிற செல்வி, ஃபினான்ஸியல் லிட்ரஸியும் பெண்களுக்கு முக்கியம்’’ என்றவாறு விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi