கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. இந்த வார்த்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி உச்சரிக்கும் ஒன்று. எந்த நிகழ்ச்சி என்றாலும் மாணவர்களை, பெற்றோர்களை ஊக்குவிக்க அவர் முன்னெடுக்கும் முயற்சி இது. மன்னார்குடியை சேர்ந்த தூய்மைப்பணியாளரின் மகளான துர்கா திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் அந்த பணி ஆணையை பெற்றவர் உணர்ச்சி பொங்க தன் தந்தையை நினைத்து உருகினார்.
என்னுடைய அப்பா நல்ல சட்டை போட்டது கிடையாது, நல்ல வேஷ்டி கட்டியது கிடையாது, நல்ல செருப்பு அணிந்தது கிடையாது. எப்போதும் காக்கி உடையில் தான் இருப்பார். நான் நல்லா இருக்கணும், நல்லா படிக்கணும்; என் பொண்ணு நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என நினைத்து அதற்காக நிறைய என் அப்பா இழந்துள்ளார். அவர் இந்த தருணத்தில் இருந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்; அவர் 7 மாசத்திற்கு முன்பு தவறிவிட்டார் என்ற துர்காவின் உருக்கமான பேட்டி கல்விதான் ஒருவரை இந்த உலகத்தில் உயர்த்தும் என்பதை தெளிவாக காட்டியது.
அவரது பேட்டியை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,’ நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியை கேட்டு அகமகிழ்ந்தேன். கல்வி தான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்காவே எடுத்துக்காட்டு; நான் மீண்டும் சொல்கிறேன் ‘கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து’ என்று தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களும் தேசிய பட்டியலில் உயர்ந்த இடத்தை பிடித்து சாதித்து உள்ளன.
தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் உள்ளிட்ட அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டது. அதில் சென்னை ஐஐடி சாதித்து உள்ளது. பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கோவை அமிர்தவிஸ்வ வித்யாபீடம் 7வது இடத்தை பிடித்து இருக்கிறது. 10வது இடத்தில் வேலூர் விஐடி உள்ளது. மாநில பொது பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்து உள்ளது. இந்த பட்டியலில் 8வது இடத்தை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பிடித்து உள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதல் இடத்தையும், திருச்சி என்ஐடி 9வது இடத்தையும் பிடித்து சாதித்து உள்ளன. மருத்துவ கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் வேலூர் சிஎம்சி 3வது இடத்தையும், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 8வது இடத்தையும், சென்னை மருத்துவ கல்லூரி 10வது இடத்தையும் பிடித்து அசத்தி உள்ளன. பல் மருத்துவ பிரிவில் சென்னை சவீதா கல்லூரி முதல் இடத்தையும், சென்னை எஸ்ஆர்எம் பல் மருத்துவ கல்லூரி 7வது இடத்தையும், சென்னை ராமச்சந்திரா கல்லூரி 10வது இடத்தையும், பார்மசி படிப்பில் ஊட்டி ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரி 4வது இடத்தையும், வேளாண்மை பிரிவில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை 6வது இடத்தையும் பிடித்து உள்ளன.
இப்படி நாடு முழுவதும் கல்வி தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு சாதித்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியை கற்றுக்கொடுப்பதுடன், தரமான மாணவர்களை உருவாக்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தூய்மைப்பணியாளரின் மகள், தனது கல்வியால் நகராட்சி ஆணையராக பணி நியமனம் பெறும் வகையில் தமிழ்நாட்டின் கல்வி தலைசிறந்த கல்வியாக மாற்றப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.