சென்னை: தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என டிஜிபி சங்கர் திவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றுதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சதுர்த்தி திதி அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும், பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில், நீர் நிலைகளில் கரைக்கும் வைபவம் நடக்கும்.
முழு முதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்த நாள் தான் கணேஷ சதுர்த்தி அல்லது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர்சதுர்த்தி விழா நெருங்கி வருவதால் பல்வேறு ஊர்களில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் அனுமதி பெற்று பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒலிபெருக்கியில் பாடல் ஒலிபரப்ப நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.