*கலெக்டர் நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள காஞ்சனகிரி மலையில் சிவன் திருத்தலம் அமைந்துள்ளது.
இங்கு தினமும் மற்றும் பவுர்ணமி தினத்தில் நடக்கும் சிறப்பு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து கலந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சனகிரி மலையையும், மலையை சுற்றியும் மேம்படுத்திட முதற்கட்ட பணிகள் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காஞ்சனகிரி மலை கோயில் சமுதாய கூடம், காஞ்சனகிரி மலை கிரிவலப் பாதையில் கழிவு நீர் கால்வாய் கட்டமைப்பு, கோயில் குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் பணி, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கோயில் அருகில் பயோ டாய்லெட் அமைக்கும் பணி உள்ளிட்ட 5 பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை அரசிடம் இருந்து கிடைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அமைய உள்ள இடங்களை கலெக்டர் சந்திரகலா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
திட்ட அறிக்கையில் சிறிய, சிறிய திருத்தங்களை மேற்கொண்டு பணிகளை தொடங்கவும், தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள திட்ட இயக்குனரை கேட்டுக் கொண்டார்.ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, செயற் பொறியாளர் செந்தில்குமார், வட்டாட்சியர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், செந்தாமரை மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் உடனிருந்தனர்.