மண்டபம் : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பார்சலை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
தமிழக கடலோரப் பகுதி வழியாக சமீபகாலமாக தொடர்ந்து பீடி இலைகள், சமையல் மஞ்சள், வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 3ம் தேதி தமிழக கடலோர பகுதியில் இருந்து 86 பார்சலில் 176 கிலோ கேரளா கஞ்சாவை படகில், இலங்கை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றனர். அப்போது கிளிநொச்சி கடலோரப்பகுதியில் ரோந்து சென்ற அந்நாட்டு கடற்படையினர் இதனை பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர். அதுபோல கிளிநொச்சி கடலோர பகுதியில் அமைந்துள்ள இரண தீவு பகுதியில் முட்புதருக்குள் மறைத்து வைத்திருந்த 99 பார்சல் அடங்கிய 207 கிலோ கேரளா கஞ்சாவை நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு பகுதியிலும் சேர்த்து எடுக்கப்பட்ட 383 கிலோ கஞ்சாவின் இலங்கை மதிப்பு ரூ.3 கோடியாகும். கஞ்சா பார்சல்களை கிளிநொச்சி போலீசாரிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.
ரூ.50 லட்சம் மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் பகுதியில், பதுக்கி வைத்திருந்த 1,290 கிலோ மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் செல்லப் போவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு மண்டபம் முதல் வேதாளை வரை, போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வந்தனர். அப்போது மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் கிராமத்தில், தெற்கு கடற்கரை அருகே பழைய வீட்டில் சாக்கு மூட்டைகளில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், மரைக்காயர்பட்டிணம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு சொந்தமான மஞ்சள் என தெரிய வந்தது. சிறுவனை பிடித்து விசாரணை செய்ததில், படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்கு 30 கிலோ அடங்கிய 43 சாக்கு மூட்டைகளில் 1,290 கிலோ சமையல் மஞ்சள்களை இந்த பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.தனிப்பிரிவு போலீசார், மண்டபம் காவல் நிலைய போலீசாரிடம் மஞ்சள் மூட்டைகளையும், சிறுவனையும் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு 17 வயதே ஆனதால், போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.