சென்னை: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார் என திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஓரணியில் தமிழ்நாடு என்னும் திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு தமிழர்களை வஞ்சிப்பதை தமிழக மக்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஜூலை 1ல் தொடங்கி 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும். திமுக அரசின் 4 ஆண்டுகால நலத்திட்டங்களை விளக்குவதோடு, ஒன்றிய அரசு வஞ்சிப்பதையும் எடுத்துரைக்க உள்ளனர். திராவிட மாடல் அரசின் திட்டங்களை கூறி மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும் என்றார். மேலும், சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் மரண வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர் அஜித் மரண வழக்கில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தொலைகாட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறிய ஆட்சி இன்று நடைபெறவில்லை என அவர் தெரிவித்தார்.