தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.12.2024) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைத்தல், பழுதுபார்த்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி அளித்தல் மற்றும் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்களுக்கு புதிதாகச் சுற்றுச்சுவர், பாதை அமைத்தல், புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்கும் திட்டங்களின் கீழ் 3 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரத்து 208 ரூபாய்க்கான காசோலைகளை தேவாலயங்கள் மற்றும் தர்காக்களின் நிர்வாகிகளிடமும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.
தொன்மையான கிறித்தவ தேவாலயங்களுக்கு நிதியுதவி
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான கிறித்தவ தேவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் செயல்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் திருத்தலத்தினை புனரமைக்க 1.55 கோடி ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, அதில் முதல் தவணைத் தொகையாக (50%) 77 லட்சத்து 60 ஆயிரத்து 8 ரூபாய்க்கான காசோலையை அருட்தந்தை இம்மானுவேல் தாசன் அவர்களிடமும்; திருச்சி மாவட்டம், லால்குடியில் செயல்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் தேவாலயம் மற்றும் சென்னை மாவட்டம், அயனாவரத்தில் செயல்பட்டு வரும் நல்மேய்ப்பர் லுத்தரன் திருச்சபை ஆகிய இரு தேவாலயங்களை புனரமைக்க ஒரு தேவாலயத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக (75%) ஒரு தேவாலயத்திற்கு தலா 15 லட்சம் வீதம் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அருட்தந்தை அடைக்கலராஜ் மற்றும் போதகர் ஸ்டான்லி ஜோசப் ஆகியோர்களிடமும்; என மொத்தம் 1 கோடியே 7 லட்சத்து 60 ஆயிரத்து 8 ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். இதுவரை இத்திட்டத்தின் கீழ், 7 தேவாலயங்களுக்கு 12.90 கோடி ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக (50%) 6.45 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 35 கிறித்துவ தேவாலயங்களுக்கு புனரமைப்புப் பணிகளுக்காக 1.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தொன்மையான பள்ளி வாசல்கள், தர்காக்களுக்கு நிதி உதவி
தொன்மையான 6 தர்காக்களில் தேவையின் அடிப்படையில் தங்கும் இடம், சீருந்து நிறுத்தும் இடம், கழிப்பிடம் மற்றும் குளியல் அறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஹஸ்ரத் ஷேக் தாவூத் காமில் வலியுல்லாஹ் தர்காவிற்கு 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணைத் தொகையாக (70%) 58 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ஜனாப் எஸ்.எஸ். பாக்கர் அலி அவர்களிடமும்; கடலூர் மாவட்டம், பண்ருட்டி, ஹஸ்ரத் நூர் முஹம்மது ஷா அவுலியா தர்காவிற்கு, 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணைத் தொகையாக (70%) 58 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ஜனாப் அபுகலாம் ஆசாத் அவர்களிடமும்; காஞ்சிபுரம் மாவட்டம், ஹஸ்ரத் ஹமீது அவுலியா தர்காவிற்கு, 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணைத் தொகையாக (70%) 56 இலட்சத்து 4 ஆயிரத்து 200 ரூபாய்க்கான காசோலையை ஜனாப் முகம்மது இம்தியாஸ் அவர்களிடமும்; கடலூர், பரங்கிப்பேட்டை, ஹஸ்ரத் உக்காஷா தர்கா, தர்காவிற்கு 83 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணைத் தொகையாக 58 லட்சத்து 73 ஆயிரத்து 700 ரூபாய்க்கான காசோலையை ஜனாப் முகம்மது பஷீர் அவர்களிடமும்;என மொத்தம் 2 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். 2021-2022 ஆம் ஆண்டு 77 வக்ஃப் நிறுவனங்களுக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் 134 வக்ஃப் நிறுவனங்களின் புனரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. 2024-2025ஆம் ஆண்டில் 100 வக்ஃப் நிறுவனங்களின் புனரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு நிதி உதவி
கல்லறைத்தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம், TELC அடைக்கல நாதர் லுத்தரன் திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் புரசைவாக்கத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணைத் தொகையாக (75%) 23 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் , போதகர் மற்றும் குழு தலைவர் ஜெ.ஜி. ஜேகோப் சுந்தர் சிங் மற்றும் கல்லறைத் தோட்ட பொறுப்பாளர் பி.ஜெ.பி. கமலாரஞ்ஜன் ஆகியோரிடம் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கபர்ஸ்தான்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 2 கபர்ஸ்தான்கள் மற்றும் 2 கல்லறைத் தோட்டங்களுக்கு பணிகள் மேற்கொள்ள நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கடன் வழங்குதல்
முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் 1999-ஆம் ஆண்டு இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின் ஆகியோர் நலனுக்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் சிறுபான்மையினருக்கு சிறுவணிகம், வியாபாரம் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது. சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இக்கழகம் தனிநபர் காலக்கடன், கைவினை கலைஞர்களுக்கான விரசாத்கடன், சிறுகடன், கல்விக்கடன் போன்ற கடனுதவிகளை வழங்கி வருகிறது. 2024 - 2025 ஆம் ஆண்டில் இக்கழகத்தின் மூலம், ரூ.75.00 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இக்கழகத்தின் மூலம், சுயதொழில் செய்ய தனிநபர் கடனாக 2 பயனாளிகளுக்கு 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் பெற்ற சிறுபான்மையினர் கல்வி நிறுவன நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தல்
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தொடர்புடைய துறைகளால் வழங்கப்பட்டு வந்த நிலையில், சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் வகையிலும், துரிதமாக வழங்கவும், 2023 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ், தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் (Empowered Committee) ஒப்புதல் பெற்று, வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இக்குழுவால் 6 முறை கூட்டங்கள் நடத்தப் பெற்று 159 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டுள்ளது. அதில் 103 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கபட்டுள்ளது. சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து சான்றிழ்கள் பெற்ற நிறுவனங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் முதலமைச்சரை இன்று சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர், மரு. தாரேஸ் அஹமத், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் முனைவர் சீ.சுரேஷ் குமார், இ.ஆ.ப., சிறுபான்மையினர் நல இயக்குநர் மு. ஆசியா மரியம், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ. அருண், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சி. பெர்னான்டஸ் ரத்தின ராஜா, கிறித்தவ தேவலாயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் விஜிலா சத்தியானந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


