சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் உயர்நிலை கல்வி பெரும் மாணவ மாணவிகளுக்கு 2022-23ஆம் ஆண்டு அரசு சார்பில் EDII நிறுவனம் நடத்திய ஹேக்கத்தான் நிகழ்வில், புதிய கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசு பெற்ற 25 உயர்நிலைக் கல்வி மற்றும் பொறியியல் மாணவ, மாணவியர்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கவும், இரண்டாம் பரிசு பெற்ற 30 பள்ளி மாணவ மாணவியர் அணிக்கு தலா ரூ. 25,000 ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா அரங்கில் 1-11-2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறவிருக்கும் விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி விழா பேருரை வழங்க இருக்கிறார்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கு கொண்டு புத்தாக்கக் கண்காட்சியை துவங்கி வைத்து விழா சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இந்த விழாவின் ஒரு அம்சமாக அரங்கத்தின் அருகே அமைந்துள்ள மற்றொரு அரங்கத்தில் பரிசு பெற்ற 55 மாணவ மாணவியர் அணிகளும் தாங்கள் கண்டுபிடித்த புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்து பொதுமக்களுக்கு விளக்க இருக்கிறார்கள். மாணவ மாணவியர், பொதுமக்கள் இலவசமாக இந்த கண்காட்சியில் பங்கு பெற்று பயன்பெறலாம்.