புதுடெல்லி: காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்று வழக்கை விசாரிக்க புதிய அமர்வு உருவாக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். கர்நாடக அரசு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 51 டிஎம்சி நீரில் 15 டிஎம்சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சியுள்ள 38 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என டெல்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரில் சுமார் 29 டிஎம்சி தண்ணீரை இன்னும் திறந்து விட வேண்டும். அதேபோல ஆகஸ்டு மாதத்தில் கர்நாடகம் 45 டிஎம்சி நீர் தர வேண்டும். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் இந்த மாதம் முழுவதும் காவிரியில் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டிஎம்சி நீரையும் காலதாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் குமணன் ஆகியோர் கடந்த 18ம் தேதி முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை விசாரிக்க புதிய நீதிபதி அமர்வை நியமிக்க வேண்டும் என்பதால், 21ம் தேதி முறைப்படி முறையிடுமாறு உத்தரவிட்டார். அதன்படி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, உமாபதி, குமணன் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா அரசு முறையாக திறந்து விடவில்லை. ஆகஸ்ட் மாதத்துக்கான நீர் பங்கீட்டையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்றனர்.
இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‘காவிரி விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த வழக்கில் உடனடியாக விசாரிக்கும் விதமாக 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு இன்றே உருவாக்கப்படும்’ என்று உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், தங்களது வாதத்தை முன்வைக்கவும், நீர்பங்கீடு தொடர்பான சாதக, பாதகங்களை விரிவாக விளக்கவும் முன்வந்தார். இதை நிராகரித்த தலைமை நீதிபதி, ‘தற்போது உங்களது வாதங்கள் எதையும் கேட்க முடியாது. புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளின் அமர்வில் உங்களது கோரிக்கைகளை வைக்கலாம்’ என்றார். இதையடுத்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் யார் என்ற பட்டியல் விவரம் இன்று மாலை வெளியாகும் என்று தெரிகிறது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி விவகாரத்தில் நமக்கு முதல் வெற்றி என்றே இது பார்க்கப்படுகிறது.