*காத்திருப்போர் பட்டியலில் 3 மாணவிகள்
தியாகராஜநகர் : தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நெல்லை மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேருக்கு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மற்ற 3 மாணவிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், அவர்களுக்கு இரண்டாவது சுற்றில் இடம் கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர். நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் 15 மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
இதில் 9 பேருக்கு தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு சென்னைக்கு அழைக்கபட்டனர். நேற்றுமுன்தினம் வரை நடைபெற்ற கலந்தாய்வில் 3 மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலும், 2 மாணவிகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
கல்லணை பள்ளியை சேர்ந்த ஷகிலா பானு என்ற மாணவிக்கு கன்னியாகுமரியில் தனியார் மருத்துவக் கல்லூரியிலும், மகாலட்சுமி என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. சமிஹா பர்கானா என்ற மாணவிக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், சக்தி பேச்சியம்மாள் என்ற மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், சங்கரி என்ற மாணவிக்கு திருச்சி னிவாசன் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
மற்ற 4 மாணவிகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு உள்ள நிலையில் ஒரு மாணவி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். மூன்று மாணவிகள் காத்திருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இரண்டாவது சுற்றில் அரசு ஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைத்தால் மருத்துவக் கல்லூரி சேர ஆவலுடன் உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகள் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தாலும் ‘கட் ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் அனைவருக்கும் இந்த ஆண்டு இடம் கிடைப்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதனால் இரண்டாவது சுற்றில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்பது காலியிடம் மற்றும் நேர்காணலுக்கு பின்னர் தெரியவரும்.
முதல் பட்டியலில் இடம் பிடித்த மாணவி சமிஹா பர்கானா 537 மதிப்பெண்களும், பேச்சியம்மாள் 533 மதிப்பெண்களும், மகாலட்சுமி 532 மதிப்பெண்களும், சங்கரி 486 மதிப்பெண்கள், ஷகிலா பானு 465 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ள 5 மாணவிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் கனியம்மாள், நீட் ஒருங்கிணைப்பாளர் வராஹினி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
நாங்குநேரி விவசாயி மகளுக்கு நாகை கல்லூரியில் இடம்
நாங்குநேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அகிலாவுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில இடம் கிடைத்துள்ளது. இவர் 521 மதிப்பெண் நீட் தேர்வில் எடுத்துள்ளார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். மாணவி அகிலாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், நீட் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.