*திண்டுக்கல்லில் நடந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
திண்டுக்கல் : தமிழகத்தில் கல்லூரிகளே இல்லாத கிராமங்கள் என்ற நிலையை உருவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என திண்டுக்கல்லில் நடந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.திண்டுக்கல்லில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கிழக்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட என் உயிரினும் மேலான எனும் பேச்சு போட்டி நேற்று நடைபெற்றது.
பேச்சு போட்டியில் என்றென்றும் பெரியார் ஏன், அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்கு பார்வை, மாண்புமிகு சுயமரியாதைகாரர் கலைஞர், கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி, இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூக நீதி காவலர் கலைஞர், தமிழ்நாட்டில் குடும்பங்களில் திமுக, பேசி வென்ற இயக்கம், திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பேசினர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக பொள்ளாச்சி உமாபதி, புதுக்கோட்டை விஜயா, சிவஜெயராஜ், மதிமாறன், மில்டன், இந்திரகுமார் தேரடி இருந்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பழநி எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், திண்டுக்கல் மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா, மேயர் இளமதி, திமுக இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. கவிதை பேச்சாற்றலில் மிகப்பெரிய உயர்வு பெற்றதில் இந்தியாவிலேயே ஒரு தலைவர் உண்டும் என்றால் அது கலைஞர் தான். கலைஞர் உச்சரிக்கின்ற மந்திர சொல்லான என் உயிரிலும் மேலான என்று உச்சரிக்கும் காந்த குரலால் தமிழகத்தில் இருக்கின்ற எட்டு கோடி மக்கள், கழக தோழர்கள் உணர்ச்சியே பெறுவார்கள்.
அதனால் தான் இந்த இயக்கம் காலூன்றி நிற்கிறது. 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தை ஆரம்பித்தவர்கள் எல்லாம் மறைந்தாலும் அந்த இயக்கத்தில் 50 ஆண்டு கால ஒரே தலைவராக ஒப்பற்ற தலைவராக சிறந்த ஆட்சியாளராக மட்டுமல்லாது கதை, இலக்கியம், நாவல் எது என்றாலும் அதில் அவர் எந்த அளவுக்கு சாதனை படைத்தார்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த பேச்சு போட்டியில் பள்ளி கல்லூரிகளில் பேச்சாற்றல் மிக்க மாணவர்கள் இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வேண்டும் என்பதற்காக எந்த வேறுபாடும் இல்லாமல் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் மறக்க முடியாத உயிரோட்டம் உள்ள ஒரு தலைவராக தலைவர் கலைஞர் இருக்கிறார். தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கல்லூரி வரை இலவசத்தை கொண்டு வந்தவர் கலைஞர். ஆனால் எவ்வளவு ஏழை குடும்பமாக இருந்தாலும் வறுமையில் வாடினாலும் அனைவருக்கும் கல்லூரியில் கல்வி நிலையை உருவாக்கியவர் நமது முதல்வர். ஒரு குடும்பத்தில் அண்ணன் தங்கை இருவர் இருந்தாலும் மாதம் மாதம் ரூ.1000. தமிழகத்தில் கல்லூரிகளே இல்லாத கிராமங்கள் என்ற நிலையை உருவாக்கியவர் முதல்வர். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கல்லூரி கொண்டு வந்து விட்டார். இனி பல்கலைக்கழகம் தான் தேவை.
அதுவும் கூடிய விரைவில் வரும். முதல்வர் கட்சிக்கு மட்டும் இல்லை, எட்டு கோடி மக்களும் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் சிந்தித்து சிந்தித்து ஒவ்வொரு காரியத்தையும், அவர் சிந்தனைக்கு கொண்டு வந்து அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து சாதனையாளராக வரலாற்றில் கலைஞருடைய மகன் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறார். எந்த மாநிலத்தில் முதலமைச்சர்களும் இவருக்கு நிகரானவர் இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் வஞ்சித்தாலும் அதையெல்லாம் தாண்டி பல திட்டங்களை கொண்டு வந்து முழு முயற்சி செய்து குடும்ப தலைவிக்கு ரூ.1000, காலை உணவு திட்டம் என யாரும் செய்யாத சாதனையை முதல்வர் கொண்டு வந்தது இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் மட்டும் தான். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களை வெளிமாநிலங்கள் பின்பற்றும் அளவிற்கு நமது முதல்வர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர்கள் மோகன், காமாட்சி, மாவட்ட துணை செயலாளர்கள் பிலால் உசேன், மார்க்ரேட்மேரி, நாகராஜ், மாவட்ட பொருளாளர்கள் விஜயன், சத்தியமூர்த்தி, மாநில மாணவரணி துணை செயலாளர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கணேசன், ஹரிஹரசுதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் அஸ்வின் பிரபாகரன், தினேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மாநகர பொருளாளர் சரவணன், பகுதி கழக செயலாளர் பஜூலுல் ஹக், அரசு போக்குவரத்து கழக எல்பிஎப சங்க பொது செயலாளர் பொன்.செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.