* பாலின் தரம் குறித்து விவசாயிக்கு குறுஞ்செய்தி
* பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு
கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் கால்நடை மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார். பொது மேலாளர் (ஆவின்) விருட்சபதாஸ் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு கால்நடை மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை முகாமினை துவக்கி வைத்து, மலட்டுத்தன்மை நீக்கும் ஊசியை மாடுகளுக்கு செலுத்தி, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆதனக்கோட்டையில் பால்வளத்துறை கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் அரசு அதிகாரிகள் வைத்திருந்த கண்காட்சியில் இயந்திரங்கள் குறித்தும் விவசாயிகள் அந்த இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என அதிகாரியிடம் கேட்டு அறிந்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நான்கரை ஆண்டுகளில் கால்நடை துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர்கள் அனைவரையும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிய வேண்டும் என கூறியுள்ளார். அதற்காக புதுக்கோட்டையில் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க அமைச்சர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகின்றனர். இப்போதுதான் அவர்களின் குறைகள் என்னவென்று தெரியவரும்.
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்கிருக்கும் விவசாயிகளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டு அறிந்து வருகின்றேன். அவர்களின் கோரிக்கைகளை பெரும்பாலானவற்றை தீர்த்து வைத்துள்ளேன்.
அப்படி குறைகளை கேட்கும் போது பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக அவர்கள் கொடுக்கும் பாலுக்கு கூட்டுறவில் உடனடியாக பணம் கிடைக்கப் பெறுவதில்லை. அதற்கு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி கூட்டுறவில் வழங்கக்கூடிய பாலுக்கு உடனடியாக 10 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். பாலுக்கு பத்து ரூபாய் லிட்டருக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன் பால் உற்பத்தியாளர்களுக்கு மூன்று ரூபாய் பால் லிட்டருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக மீண்டும் நான் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து, விவசாய பெருமக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பாலுக்கு இப்போது இருக்கும் விலையை கணக்கில் எடுத்துக் கொண்டால் மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அதுமட்டுமல்லாமல் பாலின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தரமான பால் வழங்கக் கூடிய விவசாயிகளுக்கு, கூடுதலாக ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தரம் சோதித்து எஸ்எம்எஸ்: பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் அறுபது சதவீத சங்கங்களில் பால் தரத்தை சோதிக்கும் கருவி வைக்கப்பட்டு, பால் தரத்தை சோதித்து பாலை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அந்த இயந்திரத்தில் சோதனை செய்யும் போது பாலில் எவ்வளவு புரதச்சத்து உள்ளது, எவ்வளவு தரமாக உள்ளது என்பது மொபைல் போனில் குறுஞ்செய்தியாக வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழலில் விவசாயிகள் கொண்டு வரும் பாலில் போதிய விலை கிடைப்பதில் எந்த தவறும் நடக்காது.
விவசாயிகளை கேட்டுக்கொள்வது பாலை சொசைட்டியில் கொடுக்கும் போது தரம் மெஷினில் சோதனை செய்து தரத்திற்கு ஏற்ற வருவாயை பெற்றுக் கொள்ளலாம். பல இடங்களில் சொசைட்டிகளில் பாலை குறைந்த விலையில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
இந்த இயந்திரம் வைத்த பிறகு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கிறது. தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்சம் பத்து ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் தீவனத்தில் 20% புரதம் ஆவின் நிறுவனம் மூலம் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கறவை மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆவின் மாட்டு தீவனத்தை வாங்கி பயன்பெற வேண்டும். ஆவின் தீவனத்தில் பதினாறு சதவீதம் புரதச்சத்து இருந்ததை தற்போது 20% உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன்: விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் பெறுவது பெரும் சிரமமாக இருந்து வந்தது. இதனால் கிராமங்களில் மீட்டர் வட்டி ஸ்பீடு வட்டிக்கு பணம் வாங்கும் சூழல் இருந்தது. ஆனால் பால்வளத் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் விவசாயிகளுக்கு 15% ஆக இருந்தது, அதை பிடிவாதமாக 9% குறைத்து விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு வட்டி இல்லா கடன் தமிழ்நாடு முழுவதும் ரூ.365 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது சதவீதம் வட்டியில் 635 கோடி ரூபாய் என இரண்டும் சேர்த்து ஒன்றை ஆண்டில் விவசாயிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இருந்தும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகள் இருந்தும் மாவட்டத்தில் பால் உற்பத்தி போதாது என்பது என்னுடைய கருத்து. அதை பெருக்குவதற்கு குறுகிய காலத்தில் ஒரு இலக்கு நிர்ணயித்து. அந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்க இருக்கின்றோம். விவசாயிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆவின் பொருட்களை வாங்குங்கள்: தீபாவளி, பொங்கல் பண்டிகை, கோவில் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த விழாக்களாக இருந்தாலும் ஆவின் பொருள்களான குலோப்ஜாம், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் வாங்கி பயன்பெறவும்.
எந்த ஒரு பொது மேடையிலும் அமைச்சர் முன்னிலையில் மக்கள் குறைகளை கேட்பது கிடையாது. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் தான், அமைச்சர் நான் இருக்கும் போது உங்கள் குறைகளை கேட்கிறேன், கால்நடை வளர்ப்பவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும் கடன் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன் பெறலாம் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், வட்டாட்சியர் செந்தில்நாயகி மண்டல இணை இயக்குநர் சீனிவேலன் உதவி இயக்குநர்கள் மருத்துவர்கள் கீரை.தமிழ்அசோகன், ஆனந்தன் பேராசிரியர் மற்றும் தலைவர் மண்டல ஆராய்ச்சி மையம் ரிச்சர்ட்ஜெகதீசன் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.