சென்னை: சென்னை மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகன் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. சமீப காலமாக பரவி வரும் வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 60) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பல்வேறு இணை நோய் பாதிப்புகள் இருந்த நிலையில் அதற்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.