சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் புதிதாக இருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிகாரிகள் மட்டுமின்றி அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி பணிகளில் அலட்சியமாக இருந்தாலோ அல்லது பணிகளை முறையாக செய்ய தவறினாலோ அதிகாரிகள் இடம் மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அதுகுறித்து அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக மூன்று அல்லது நான்கு அமைச்சர்கள் நீக்கப்படலாம் என்றும் புதியதாக இருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரிதிநிதித்துவம் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இலாகா மாற்றமும் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.