ஈரோடு: தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான தொழில், தொழிற்சாலை, உணவகங்கள், பனியன் ஆலைகள் என எங்கும் நிறைந்திருக்கும் நிலையில், விவசாயத்திலும் களமிறங்கி வேளாண் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றன. ஈரோடு காலிங்கராயன் பாசன பகுதிகளில் நடவு பணிகளையும் வடமாநில தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாசன பகுதிகளில் நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றனர். இங்கு வேளாண் பணிகளுக்கு கடும் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் பல இடங்களில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஆத்தூர், சேலம், எடப்பாடி, சங்ககிரியில் இருந்து நடவு பணிகளுக்காக தொழிலாளர்கள் இந்த ஆண்டு வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
போதிய கழனி வேலையாட்கள் கிடைக்காததால் கவலையில் இருந்து ஈரோடு விவசாயிகளுக்கு கைகொடுத்துள்ளனர் தமிழ்நாட்டில் பிழைப்புத்தேடி தஞ்சம் அடைந்துள்ள வடமாநில தொழிலாளர்கள். ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இணையாக நேர்த்தியாக நெல் நாற்றுகளை நட்டு கவனம் பெற்றுள்ளனர். ஈரோட்டில் பல குழுக்களாக தங்கும் 400 தொழிலாளர்களை பல்வேறு வயல்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் தமிழ் பேச தெரிந்த வடமாநில தொழிலாளி ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
வேளாண் பணி சவால் நிறைந்தது என்றாலும் தமிழ்நாட்டில் விவசாய வேலைக்கு நல்ல கூலி கிடைப்பதால் மனநிறைவுடன் வேலை செய்து வருவதாக வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மாநில வேளாண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. கூலி உயர்வு தடுக்கப்படுகிறது போன்ற எதிர்ப்பு குறைகள் ஆங்காங்கே எழுந்தாலும் விவசாய தொழிலாளர் பற்றாக்குறை சமாளிக்கவும், காலத்தில் பயிர் செய்யவும் வடமாநில தொழிலாளர்களின் தேவை இன்றைய சூழலுக்கு அவசியமாக இருக்கிறது என்கின்றனர் தமிழ்நாடு விவசாயிகள்.