சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன் (71) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பூக்களைப் பறிக்காதீர்கள்” என்ற திரைப்படம் அவரின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் ஆகும். தொடர்ந்து, பிரபு நடித்த (என் தங்கச்சி படிச்சவ), சத்யராஜ் நடித்த (வேலை கிடைச்சிடுச்சி), அருண்பாண்டியன் நடித்த (கோட்டை வாசல்) கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வ திருமகள் உள்ளிட்ட பல படங்களை மோகன் நடராஜன் தயாரித்துள்ளார்.
நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல்” உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து உள்ளார். இவர் கடந்த வருடங்களாவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் மோகன் நடராஜன் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.