தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 70வது வார்டு, மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் கல்வி நிதி 2023-24 கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்றது. இப்பணி முடிவுற்ற நிலையில், அதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, 68வது வார்டுக்கு உட்பட்ட அகரம் பிரதான சாலையில் மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட எல்இடி மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதேபோல, குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட எல்இடி மின்விளக்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, நகர அமைப்புக்குழு தலைவர் மாடம்பாக்கம் நடராஜன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலந்தூர்: மூவரசன்பட்டு ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியில் இருந்து ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.