தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல குழு கூட்டம் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில் மண்டலத்துக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தண்ணீர் பிரச்னை, குப்பை அகற்றுதல், சாலை சீரமைப்பு, தெருவிளக்கு, பூங்கா பராமரிப்பு என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த மண்டல தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். வரும் பருவமழையை முன்னிட்டு கால்வாய்களை தூர்வார 70 லட்சம் ரூபாய், மழை காலத்தில் தடுப்புகள் கட்டுவதற்கும், மழைக்காலத்தில் ஏற்படுகிற பாதிப்புகளை சரிசெய்ய பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கு 30 லட்சம் ரூபாய். கல்வெட்டுகள், கால்வாய்கள் சீர்செய்ய 3 கோடியே 11 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.4.11 கோடி ரூபாய்க்கு 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பல்லாவரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்சார சுடுகாட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்குவது மற்றும் அதனை பூங்காபோல் வடிவமைக்க 1 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது எனவும், 1.88 கோடி ரூபாய்க்கு பாதாள சாக்கடையின் பழுதடைந்த பணிகளை சரிசெய்ய மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார் எனவும், பூங்காக்களை மேம்படுத்த 2 கோடி 20 லட்சம் ரூபாயில் பூங்காக்களை மேம்படுத்த மாநகராட்சி ஆணையர் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது, திருவள்ளுவர் நகரில் மழைநீர் கால்வாய் கட்டுவதற்கு முதல்கட்டமாக 1 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கி பணிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மண்டல குழு தலைவர் கேட்டுக்கொண்டார். அதேபோல, இனிவரும் காலங்களில் கால்வாய்கள் மற்றும் சில பணிகளுக்காக மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த பணிகளுக்காக மாநகராட்சி ஆணையரிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் மண்டல குழு தலைவர் உறுதியளித்தார்.