தாம்பரம்: தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்-நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசை தோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்வில் குறைந்தபட்சம் 1,000 மாணவர்கள் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்துகொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை குறித்து மாணவ – மாணவியர்களிடையே உரையாற்றினார். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 கல்லூரிகளில் இருந்து மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் வில்சன், அரசு அலுவலர்கள், மாணவ – மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.