சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி பணம் ரயில்வே கேன்டீன் ஒப்பந்ததாரர் முஸ்தபா என்பவருக்கு சொந்தமான பணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கணக்கில் வராமல் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி பணத்துடன் பிடிபட்ட ஓட்டல் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட 3 பேர், தேர்தல் செலவுக்காக பாஜ சார்பில் போட்டியிடும் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாக வாக்கு மூலம் அளித்தனர். அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டல் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜ தொழில்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் ஓட்டல் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி சில ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பாஜ தொழில்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் என 15 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. இறுதியாக பாஜ எம்எல்ஏவும், நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளருமான நயினார் நாகேந்திரனிடம் கடந்த 16ம் தேதி 8 மணி நேரம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த ரூ.4 கோடி பணம் தொடர்பான கேள்விக்கு அவர், பிடிபட்ட பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று தொடர்ந்து கூறியுள்ளார். அதேநேரம், நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்களின் நண்பர் என கூறப்படும் சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் பரத் என்பவர் ரூ.30 லட்சம் பணத்தை நயினார் நாகேந்திரன் ஓட்டலுக்கு கொண்டு வந்து கொடுத்தது தெரியவந்தது.
பிறகு சிபிசிஐடி அதிகாரிகள் நகைக்கடை ஊழியர் பரத்திடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீர் திருப்பமாக ஈரோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி பணம் தன்னுடையது என உரிமை கோரியுள்ளார். பணத்திற்கு உரிமை கோரியுள்ள முஸ்தபா, ரயில்வே கேன்டீன் ஒப்பந்ததாரர். இவர், பல ரயில் நிலையங்களின் உணவகங்கள் மற்றும் ரயில்களில் கேன்டீன் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் ரூ.4 கோடி பணத்திற்கு பல மாதங்கள் கழித்து உரிமை கோரிய ரயில்வே கேன்டீன் ஒப்பந்ததாரரான முஸ்தபாவுக்கு சம்மன் அனுப்பிள்ளனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு முஸ்தபா எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் உரிமை கோரிய ரூ.4 கோடி பணத்திற்கான ஆவணங்கள் என்ன, 4 மாதங்களுக்கு பிறகு உரிமை கோருவது ஏன், இவ்வளவு நாட்களாக என்ன செய்தீர்கள், பணத்துடன் பிடிபட்ட நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்று கூறுகிறார்களே என 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அதற்கு முஸ்தபா அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
இந்த விசாரணை 8 மணி நேரம் நீடித்தது. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு ரூ.4 கோடி பணத்திற்கு திடீரென ரயில்வே ஒப்பந்ததாரர் ஒருவர் உரிமை கோரியுள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய பிறகு தான் முழு விவரங்கள் தெரியவரும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
* ரூ.4 கோடி பணத்திற்கான ஆவணங்கள் என்ன, 4 மாதங்களுக்கு பிறகு உரிமை கோருவது ஏன், இவ்வளவு நாட்களாக என்ன செய்தீர்கள், பணத்துடன் பிடிபட்ட நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்று கூறுகிறார்களே என 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அதற்கு முஸ்தபா அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.