தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம், 1வது வார்டு, விஜிஏ நகர் பகுதியில் ரூ.5 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும், அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 1வது மண்டலம், 4வது வார்டு, கல்மடு பகுதியில் அமைந்துள்ள நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தையும், 8வது வார்டு, மாதவ் தெரு பகுதியில் ரூ.10 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 1வது மண்டலம், 5வது வார்டு, சங்கர் நகர் பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகளையும், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையினைத் தொடர்ந்து 1வது மண்டலம், 3வது வார்டு, பாரி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீர் விரைந்து வெளியேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.