தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், காரியமண்டபம் ஆகியவற்றை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். ல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி 29, 30வது வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 31வது வார்டில் காரிய மண்டபம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு, 29வது வார்டில் உள்ள ஜெயஸ்ரீ முத்துக்குமாரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், 30வது வார்டு டிஎன்ஹச்பி காலனி, துர்கா நகரில் ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், 31வது வார்டு லட்சுமிபுரம், முக்காலத்தம்மன் குளக்கரையில் ரூ.10 லட்சம் மதிப்பிட்டில் காரிய மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு, ரூ.30 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், காரியமண்டபம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், பகுதி செயலாளர் திருநீர்மலை த.ஜெயகுமார், மாமன்ற உறுப்பினர்கள் சண்முகசுந்தரி ஜெயக்குமார், சித்ராதேவி முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.