சென்னை: தாம்பரம் அருகே திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் புத்தூர் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரவணன் (30), பி.காம் பட்டதாரியான இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி காயத்ரி (25), பிஎஸ்சி பட்டதாரியான இவர் சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆகிறது.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சரவணன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து சரவணன் கதறிஅழுதுள்ளார். சிறிது நேரத்தில் அவரும் அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.