தாம்பரம்: தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாக கார் ஓட்டி வாகனங்கள் மீது மோதிய போலீஸ்காரரை மடக்கி பிடித்து பொதுமக்கள் அறிவுரை கூறினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று இரவு தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலை வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவரது பைக்கை மோதுவதுபோல் கார் ஒன்று வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட விக்னேஷ் விபத்தில் இருந்து தப்பினார். அந்த கார் முன்னால் சென்ற சில வாகனங்கள்மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது.
கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போதுதான் காரை ஓட்டி வந்தது போலீஸ்காரர் என்பதும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. காருக்குள் இருந்த காவலர் உடையில் ராமதுரை என பெயர் இருந்தது. இதையடுத்து போலீஸ்காரரிடம் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டுகிறீர்களே, நியாயமா, குற்றசம்பவங்களை தடுக்கவேண்டிய நீங்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா, உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது என கேட்டனர். அளவுக்குஅதிகமான மதுபோதையில் இருந்தால் நான் எந்த தப்பும் செய்யவில்லை என உளறி யுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.