தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், 29வது வார்டு, நாகப்பா நகரில் ரூ.27 லட்சத்தில் 302 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை பணியை, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, 30வது வார்டு, முத்தளத்தம்மன் கோயில் குளத்தில் ரூ.30 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், 5வது வார்டு, நேசமணி தெருவில் ரூ.8.68 லட்சத்தில் 120 மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு, சரியான அளவு மற்றும் தரத்துடன் சாலையை அமைத்திட அறிவுறுத்தினார். இதையடுத்து, 6வது வார்டு, எம்ஜிஆர் நகரில் ரூ.85 லட்சத்தில் நடைபாதை, விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி உபகரணங்கள், பொதுக்கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அறிவியல் பூங்காப் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.