தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பீர்க்கன்காரணை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெளியேறும் நீர், கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருள் நகர் அருகேயுள்ள கலங்கல் வழியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து மேற்கு தாம்பரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும். ஆனால் சம்பந்தப்பட்ட பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் இரும்புலியூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துவிடும். இதனால் அப்பகுதி மக்கள் மழைக்காலத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது வழக்கம்.
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, மழைக்காலத்தில் வெளியேறும் நீர் இரும்புலியூர் – ரயில்வே லைன் – முடிச்சூர் சாலை வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் 12,000 அடி நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் 3.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 16 அடி அகலம், 9 அடி ஆழம் கொண்ட மூடுகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அவ்வழியாக செல்லும் பாலாறு குடிநீரின் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் குழாயில் இருந்து குடிநீர் பல அடி உயரத்திற்கு புஸ்வானம் போல் பீய்ச்சி அடித்து அருவிபோல் ஊற்றியது. இதனால் சுமார் 10 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் வீணானது. தகவலறிந்த தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிநீர் பம்ப் செய்வதை நிறுத்திவிட்டு பின்னர் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பின்னர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு பின்னர் மீண்டும் குடிநீர் பம்ப் செய்யப்பட்டு வழக்கம்போல பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மீண்டும் மூடுகால்வாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.