தாம்பரம்: தாம்பரத்தில் மின்னல் வேகத்தில் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தாம்பரம் – பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலை, காந்தி சாலை, தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை, ஐஏஎப் சாலை போன்ற முக்கிய சாலைகளில் வேகத்தடைகள் இல்லாததால் தினமும் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
அதிலும், குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சென்று வருவதால் மேற்கண்ட பகுதிகளில் தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கிறது. பெரும்பாலும் இரவு நேரங்கள், அதிகாலை நேரங்களில் அதிக ஒளி எழுப்பும் சைலன்சர் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர்.
கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்பு வீடுகள், கடைகள் என பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள கிழக்கு தாம்பரம் ஐஏஎப் சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ரேஸ் ஓட்டி வருகின்றனர். இதற்கு, முக்கிய காரணம் அந்த சாலையில் வேகத்தடை இல்லாததுதான் என பலமுறை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும், இதுவரை அங்கு வேக தடைகள் அமைக்கப்படவில்லை.
இதேபோல தான் முக்கிய பிரதான சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் செல்பவர்கள் மற்ற வாகனத்தில் மோதியோ அல்லது நிலை தடுமாறி கீழே விழுந்தோ விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கின்றனர். சிலருக்கு கை, கால்கள் முறிவு ஏற்படும் நிலையும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாம்பரம் மாநகராட்சி, 50வது வார்டு, மேற்கு தாம்பரம், கல்யாணசுந்தரம் தெரு பகுதியில் வீட்டின் வெளியே சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது வேகமாக மோதியதில் சிறுமி இருசக்கர வாகனத்தில் சிக்கி சில மீட்டர் தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டார். இதனைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக சென்று காயமடைந்த சிறுமியை மீட்டனர். கீழே விழுந்த பயத்தில் சிறுமி மூச்சு பேச்சு இன்றி இருந்ததால், பொதுமக்கள் உடனடியாக அவரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் சிறுமி சிக்கி தரதரவென இழுத்து செல்லப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
* கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தாம்பரம் சுற்றுப்புற பகுதி முக்கிய சாலையில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் சிறுவர்கள், வாலிபர்களால் ஏற்பட்டு வரும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட உரிய ஆவணம் இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டு அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடியிருப்பு வீடுகள் அதிகம் உள்ள பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், கடைகள் என பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு அதிவேகமாக வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.