தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு மற்றும் தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை புறநகர் ரயில்கள் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 1 மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் எந்தவித முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவதாகவும், அரை மணி நேரம் முதல் 1 மணி நேரத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு செல்வதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர்.
கடந்த 2 நாட்களாக நீடித்து வரும் பிரச்னையால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்லமுடியவில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி நாளை முடிவடையுள்ள நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை நாளை மதியத்திற்குமேல் வழக்கம்போல செயல்படும் எனவும், பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.