தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டார். தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.
இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகள், மேலாளர் மற்றும் ஆர்பிஎப் உள்ளிட்டோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிகாரிகள் டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் உள்ள பொதுமக்களை அகற்றிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து செல்போன் எண்ணையும் சைபர் கிரைம் போலீசார் ஒரு பகுதியாக தேடி வருகின்றனர்.
மர்ம நபர் அழைப்பானது கூடுவாஞ்சேரியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி மூலம் மர்ம நபர் பேசிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். வெடிகுண்டு குறித்து மோப்பநாய் , சென்ட்ரலில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு தேடுதல் படையினர் ஆகியோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதியில் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளிடையே அச்சம் காணப்படுகிறது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பகுதிக்கும் போலீசார் விரைந்துள்ளனர்.