தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அதிகாரிகளிடம், மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் கூறியதாவது:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் எதிர்வரும் பருவமழையினை எதிர்கொள்ள, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி சார்பில் எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக, மழைக்காலங்களில் முக்கிய பிரதான சாலைகளான வேளச்சேரி, முடிச்சூர், பல்லவபுரம் ஜிஎஸ்டி சாலை மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் பொதுமக்கள், போக்குவரத்திற்கு எந்த இடையூறுமின்றி அப்புறப்படுப்பட வேண்டும்.
மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதற்கென தனியாக குழு ஒன்று ஏற்படுத்தி, தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏரிகளில் முகப்பு பகுதிகளில் செல்லும் அதிகப்படியாக உபரிநீரின் காரணமாக உடைப்பு ஏதும் நிகழாதபடி மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் செல்ல கசடுகளை உடனடியாக தூரிவாரி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரிய மழைநீர் வடிகால்வாய் ஒரங்களில் மழைநீர் செல்லும் துவாரங்களை கண்டறிந்து அவற்றினை சுத்தம் செய்து கண்காணிக்கப்பட வேண்டும். மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பழதடைந்த கட்டிடங்கள் கண்டறிந்து அகற்றுதல் மற்றும் சாலை ஓரங்களில் ஆங்காங்கே கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, அதனை மழைக்காலம் துவங்குவதற்கு முன்னபாக முடிக்கப்பட வேண்டும்.
மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக கால்வாய் பணிகள் மற்றும் சாலை பணிகளை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை 10 நாட்களுக்குள் அதிகாரிகள் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.