தாம்பரம்: புறநகர் பகுதிகளான வேங்கைவாசல், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், மதுரபாக்கம், அகரம்தென், திருவஞ்சேரி, முடிச்சூர், கவுல்பஜார், மூவரசம்பட்டு, பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய 15 ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் ஒருங்கிணைந்த குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்தபட திட்டமிட்டு அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, திட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
அரசின் அறிவிப்பை அடுத்து மேற்கண்ட ஊராட்சிகள் அனைத்தும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.
இந்நிலையில் நேற்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கண்ட 15 ஊராட்சிகளின் தலைவர்கள், செயலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள மக்கள் தொகை, குடியிருப்பு வீடுகள், வருமானம், நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், குப்பை சேகரிப்பு வாகனங்கள், மின்விளக்குகள், சாலைகள் போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். இதை வைத்து அடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.