நன்றி குங்குமம் டாக்டர்
கீரைகள் நம் ஆரோக்கியத்தின் நண்பன். இந்தக் கீரைகளின் மேன்மை பற்றி அகத்தியர், தேரையர், போகர் போன்ற சித்தர்கள் தங்கள் நூல்களில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். புளியாரைக் கீரை பற்றி இங்கு பார்ப்போம். புளிச்சக் கீரையும் புளியாரைக் கீரையும் வேறு வேறு. சிலர் இதனை ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள். புளியாரைக் கீரையை ஆங்கிலத்தில் ‘Creeping Woodsorrel’ என்பார்கள்.
இது, நீர் நிலைகளின் அருகிலும், செழிப்பான பகுதிகளிலும் தானாகவே வளரக்கூடிய கீரை வகையாகும். இதன் இலைகள் பிளவுடன் மூன்று தொகுப்புகளாகப் பார்ப்பதற்கு மலர்களைப் போன்றே இருக்கும். இதில் ஊதா நிற இலைகளைக் கொண்டது, பச்சை நிற இலைகளை கொண்டது என வகைகள் உள்ளன. இரண்டுமே மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இதன் பெயருக்கேற்றார் போல் இதன் இலைகளில் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும்.
இந்தச் செடி முழுவதும் வைட்டமின் சி நிறைய உள்ளது. இது உடல்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியை உண்டு பண்ணும். மேலும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுத்து சளித் தொந்தரவுகளிலிருந்து காக்கும். ரத்தத்தை மேம்படுத்தும். புளியாரைக் கீரை பசியைச் தூண்டும். நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியை தரும். இதன் இலைகளைத் தனியாகச் சாப்பிட்டால், எலுமிச்சையின் ருசியுடன் இருக்கும். புளியாரையின் மருத்துவ குணங்களை சித்தர்கள் நெடுங்காலமாகவே அறிந்து, அதன் பயனை எழுதி வைத்துள்ளார்கள். அகத்தியர், தனது குணவாகட நூலில் இதன் சிறப்பைப் பற்றி சொல்லும்போது,‘பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்குநித்தமருள் வாதகபம் நேருமோ-மெத்தனவேமூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்கோலப் புளியா ரைக்கு’என்கிறார்.
இக்கீரையினால் பித்த மயக்கம், மூலம், மூலத்திலிருந்து வடியும் ரத்தம், கிராணி(கடுப்புக் கழிச்சல்), குருதிக் கழிச்சல் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.புளியாரையின் ஊட்டச்சத்து நூறு கிராம் புளியாரை கீரையில் தண்ணீர் 86%, கார்போஹைட்ரேட் 8.2%, புரதம் 2%, கொழுப்பு 0.8% உள்ளன. மேலும், கால்சியம்-150 மி.கி, பாஸ்பரஸ்-78 மி.கி, இரும்புச்சத்து-65 மி.கி, நியாசின்-0.6 மி.கி, வைட்டமின் சி-178 மி.கி மற்றும் பீட்டாகரோட்டின், ஃப்ளாவினாய்டுகள் உள்ளன.
கோடை காலத்தில் உடலின் ஆற்றலுக்கும், உடல் குளிர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் இது ஒரு அருமருந்து. புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம் இவற்றைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டுவந்தால் விதை வீக்கம், வெள்ளைப்படுதல், உடல் சூடு நீங்கி உடல் நோயின்றி நெடுநாள் வாழலாம் என்று சித்தர் பெருமான் தேரையர் தன்னுடைய பாடலில் கூறுகிறார்.
‘ புளியாரை விரைவாத மேகமற வெட்டுமுகின் மேலேவிரைவாத மென்னவதின் மேல்’(தேரர் யமக வெண்பா)புளியாரை இலையை அரைத்து உடம்பில் வரும், மரு,பாலுண்ணி, தாமரைமுள்ளுக்குப் பூசிவர, அவை உதிர்ந்து தோல் தழும்பின்றி மாறும்.
புளியாரை இலைகளுடன்,சின்ன வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்தரைத்து சோற்றுடன் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண், அடிக்கடி வரும் கழிச்சல், கழிச்சல் போக வேண்டும் என்ற உணர்வு (IBS) நீங்கி குடல் வலுவடையும்.புளியாரை இலையைப் பிழிந்து சாறு கொடுக்க, ஊமத்தை விசத்தினால் உண்டாகும் நஞ்சுக் கொடுமை நீங்கும்.புளியாரை இலைச்சாறு 15-30 மி.லி அளவில் தினம் ஒருவேளை எடுத்துவந்தால், சீதபேதி, மூலம், ரத்த மூலம் குணமாகும்.
காய்ச்சல் வேளைகளில் இதன் இலையுடன், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து காய்ச்சிக் குடித்தால், சுரத்தின் வேகம் தணியும். உடல் சோர்வை நீக்கி நல்ல பலனைத் தரும்.
இதன் இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து ஆறிய பிறகு, வாய் கொப்பளித்துவந்தால் பல் ஈறு வலுவடையும், வாய்ப்புண், நாக்குப் புண் குணமாகும்.
புளியாரை இலைகளை சந்தனத்துடன் நீர் விட்டரைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் மசாஜ் செய்துவந்தால், கரும்புள்ளிகள், தோல் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.இரவில் தூக்கமின்மை நீங்கி, நன்றாகத் தூங்குவதற்கு இதன் இலைகளை, தண்ணீரில் கொதிக்கவைத்து, தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.இவ்வளவு அற்புதமான மூலிகைக் கீரையைக் கண்டால் உடனே வாங்கி உணவாக அருந்துங்கள். அது உடலை அமிர்தம் போன்று நலமுடன் பேணி பாதுகாக்கும்.
தொகுப்பு: சரஸ்