‘‘தாமரை லோக்கல் தலைவருக்கு மினி செல்லூர் ராஜூனு புது பட்டம் கிடைச்சிருக்காமே.. என்னா விஷயம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘தினம் ஒரு திருக்குறள் என்பது போல தினம் ஒரு பொய் என்ற இலக்கை நோக்கி தாமரை கட்சி மாநில தலைவர் மலையின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன. இவரது தினம் ஒரு பொய்தான் சமூக ஊடகங்களில் டிரெண்டிங்காக இருக்குது. சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு 1967ல் சத்ரபதி சிவாஜி வந்ததாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய மலை, மஞ்சள் மாவட்டத்தில் முதல்கட்ட பாத யாத்திரைங்கிற பெயரில் வாகன யாத்திரை போனார். சந்தனக்காடு பகுதியில் நடந்த யாத்திரையின்போது, மஞ்சள் மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் இருந்தும் மாவட்டத்திற்கு ஒன்னுமே செய்யவில்லை என்று பேசி, அசத்திப்போட்டார். மாவட்டத்தில் ஒரே அமைச்சர்தான் உள்ளார் என்பதுகூட இந்த மலைக்கு தெரியாமல் போய்விட்டது. `வர… வர நம்ம ஆளு செல்லூர் ராஜூ மாதிரி ஆயிட்டு வர்றாரே… இப்படி இருந்தால், இவரது தலைமையில், தமிழகத்தில் பூ எப்படி மலரும், காய் எப்படி காய்க்கும்…?’ என உடன் வந்தவர்கள் நொந்துகொண்டனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுவையில் தலைமை செயலர் கடிதம் விவகாரமா ஆயிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி ரூல்ஸ் ராமானுஜமாக இருந்த குமாரை மாற்றிவிட்டு புதிய தலைமை செயலராக வர்மாவை நியமித்தார்களாம். தேஜ கூட்டணி ஆட்சியின் திட்டங்கள் தங்கு தடையின்றி இனிமேல் நடைபெறும் என அமைச்சர்கள் குதூகலித்தார்களாம். ஆனால் எல்லாம் சில மாதங்கள்தான் நீடித்தது. அதற்குள்ளாக முதல்வருக்கும், தலைமை செயலருக்கும் முட்டல்கள் ஆரம்பமானது. கோப்புகளில் கையெழுத்து போடவில்லை, காலதாமதப்படுத்துவதாக பகிரங்கமாக புல்லட்சாமி குற்றம் சாட்டினார். உச்சபட்சமாக புல்லட்சாமிக்கு தெரியாமல் அதிகாரிக்கு இலாகா ஒதுக்கிவிட்டதாக கூறி, அவரை சபாநாயகர் அறைக்கு அழைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வசைபாடினர். இதனை பக்கத்தில் இருந்த தமிழ் தெரிந்த அதிகாரி மொழி பெயர்ப்பில் கேட்டபோது, வசவு சொற்களால் நொந்து போனாராம் தலைமை செயலர். உடனே உள்துறைக்கு விலாவாரியாக ஒரு கடிதம் எழுதினாராம், அதில் புதுச்சேரியில் எந்த அதிகாரியை தலைமை செயலராக நியமித்தாலும், தாக்குப்பிடிக்க முடியாது எனக்கூறி அவர், இதுவரை புல்லட்சாமி ஆட்சியில் மாற்றப்பட்ட தலைமை செயலர், நிதி செயலர் குறித்த பட்டியலை தெரிவித்தாராம். நிதியில்லாமலும், அதற்கு வழி சொல்லாமலும் பல திட்டங்களை புல்லட்சாமி போகிற போக்கில் அறிவிக்கிறார். அதற்கு காரணம் கேட்டு கோப்புகளில் குறிப்பு அனுப்பினால் பதில் இல்லை. அப்படியே இருந்தாலும் விதிகளை மீறச்சொல்கிறார்கள். எனவே நிர்வாக நடைமுறைகளை எப்படி செயல்படுத்துவது என கடிதத்தில் கேட்டுள்ளாராம். இறுதியாக நான் இப்படித்தான் இருப்பேன், விதிப்படித்தான் என்னால் செயல்பட முடியும் என்ற விளக்கத்தை அளித்துள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் மனம் புழுங்கி கிடக்காராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் நீண்டகால இழுபறிக்கு பின் நெற்களஞ்சியத்திற்கு சேலம்காரர் அணி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தங்களுக்கு அந்த பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய நிர்வாகிகள் பலருக்கு பதவி வழங்கப்படவில்லை. இதனால் சேலம்காரர் மீது அவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம். இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலைகட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பற்றி யாரும் பேசவில்லை. இதனால் புதிதாக பொறுப்பு கிடைத்துள்ள அந்த மாவட்ட செயலாளர் வருத்தத்தில் இருந்து வருகிறார். பதவி கிடைத்ததில் இருந்து யாரும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டுக்காங்க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தன்னை ஓரங்கட்டி வருகின்றனர். சேலம்காரர் தான் தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளார். இதற்கு நான் என்ன செய்ய முடியும் என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலக்கத்துல இருக்கும் மாங்கனி மாநகரம் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியில 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க உள்ளதா பேச்சு அடிபட்டு வருது. அந்த பொறுப்பை பிடிக்க பலபேரு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க. மாங்கனி மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. மாநகரில் உள்ள 3 தொகுதியை தற்போது உள்ள மாநகர் நிர்வாகி தனது கட்டுப்பாட்டில் இருக்க பல வேலைகளை செய்துட்டு இருக்காரு. அதுக்காக இலைக்கட்சி தலைவரிடம் நல்ல பெயரை வாங்க பலரை போட்டுக்கொடுத்துட்டிருக்காராம். அதே நேரத்துல அவரிடம் உள்ள 2 தொகுதியை பிரிச்சு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க புறநகர் நிர்வாகி இறங்கி வேலை செய்துகிட்டு வர்றாராம். இதனால மாநகர் நிர்வாகி கலக்கத்தில இருக்காருன்னு கட்சிக்காராங்க மத்தியில பேச்சா இருக்குது’’ என்றார் விக்கியானந்தா.